பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கான விமான சேவையை பிரிட்டிஷ் எயார்வேஸ் (British Airways) மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய, லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அதன் முதலாவது விமானம் இன்று (24) காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
போயிங் 777-200ER ரகத்தைச் சேர்ந்த குறித்த விமானம், BA2045 என்ற விமான இலக்கத்தின் கீழ் இயக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான விமானப் போக்குவரத்துத் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில், லண்டன் கேட்விக் மற்றும் கொழும்பு இடையே வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை முன்னெடுக்க பிரிட்டிஷ் எயார்வேஸ் திட்டமிட்டுள்ளது.
இந்த விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இலங்கையின் முக்கிய சுற்றுலாப் பயணிகள் சந்தைகளில் ஒன்றாக ஐக்கிய இராச்சியம் விளங்குகின்றது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், சுற்றுலாத்துறை, வணிகப் பயணங்கள் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்தவும் இந்தச் சேவை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் ஹேலீஸ் குழுமத்தின் துணை நிறுவனமான அட்வான்டிஸ் ஏவியேஷன் சர்வீசஸ் (Advantis Aviation Services), பிரிட்டிஷ் எயார்வேஸின் இலங்கைக்கான பொது விற்பனை முகவராக (GSA) செயற்படவுள்ளது.
பிரிட்டிஷ் எயார்வேஸின் தகவல்களின்படி, கொழும்புக்கான இந்த விமான சேவை குளிர்கால விமான அட்டவணையின் கீழ் பருவகால சேவையாக முன்னெடுக்கப்படும்.
இந்தச் சேவையில் பொருளாதார வகுப்பு (Economy), பிரீமியம் பொருளாதார வகுப்பு (Premium Economy) மற்றும் வணிக வகுப்பு (Business Class) ஆகிய பயண வசதிகள் வழங்கப்படவுள்ளன.







