இலங்கையின் கல்வித் துறையில் தரப்படுத்தல் மற்றும் தொழில்சார் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், “கல்வி கவுன்சில்” ஒன்றை நிறுவுவதற்கான சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகள் ஒரு வருடத்துக்குள் நிறைவு செய்யப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தக் கல்வி கவுன்சில் நிறுவப்படவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு 2026 ஆகஸ்ட் 25ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும், அரசியலமைப்பு மற்றும் நடைமுறையில் உள்ள சட்டங்கள், விதிமுறைகளுக்கு அமைவாக சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நிபுணர் குழுவின் அறிக்கையை சட்டவரைஞரிடம் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்பள்ளி, ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி மட்டங்களில் பணியாற்றும் கல்வித்துறைசார் நிபுணர்களின் தொழில்சார் மேம்பாடு, தரப்படுத்தல், பதிவு, ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பார்வையை உறுதி செய்வது முன்மொழியப்பட்ட கல்வி கவுன்சிலின் முக்கிய பொறுப்புகளாக இருக்கும்.
மேலும், தொழில்சார் மேம்பாடு மற்றும் தர உத்தரவாதம் தொடர்பில் கல்வி அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதுடன், இருமொழிக் கல்வியாளர்கள் மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கல்வித்துறைசார் நிபுணர்களை உருவாக்குவதற்கும், இருமொழிக் கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் கவுன்சில் நடவடிக்கை எடுக்கும்.
ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் தொழில்சார் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான தகைமைகளை தரப்படுத்துவதும் கவுன்சிலின் மற்றுமொரு நோக்கமாகும்.
அத்துடன், கல்வித்துறைசார் நிபுணர்களின் உரிமைகள் மற்றும் குறைகள் தொடர்பான விடயங்களில் அரசாங்கத்துக்கும் கல்வித்துறைசார் நிபுணர்களுக்கும் இடையிலான இடைத்தரகராகவும் கவுன்சில் செயற்படும்.
அனைவருக்கும் சமமான மற்றும் தரமான கல்விக்கான அணுகலை உறுதி செய்வதற்கும் இந்தக் கவுன்சில் பங்களிக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஆசிரியர்களுக்கான தொழில்சார் உரிமம் மற்றும் சான்றிதழ் வழங்கும் முறையும் இந்த சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
திறன் தரநிலைகள் மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில் தேவையான தகைமைகளைப் பூர்த்தி செய்பவர்களுக்கு மாத்திரமே ஆசிரியர் உரிமங்கள் வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஏனைய உரிமம் பெற்ற தொழில்களைப் போலவே ஆசிரியர்களின் தொழில்சார் அந்தஸ்தையும் கண்ணியத்தையும் மேம்படுத்துவதே இந்த முறையின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் தமது கடமைகளை திறம்பட நிறைவேற்றுவதற்குத் தேவையான பாடசாலை மற்றும் வகுப்பறை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், முன்மொழியப்பட்ட கல்வி கவுன்சில் அரச அல்லது அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தவோ அல்லது அவற்றின் கல்வித் திட்டங்களின் தரத்தை மதிப்பிடவோ செய்யாது.
பொதுக் கல்வி முறையின் தரத்தை மேம்படுத்துவதில் மாத்திரமே இந்த முயற்சி கவனம் செலுத்தும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார எழுப்பிய கேள்விக்கு இன்று (07) நாடாளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.








