யாழ்ப்பாணம், செம்மணி புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகளும் விசாரணைகளும் முழுமையான நீதிமன்ற மேற்பார்வையின் கீழ், விஞ்ஞான ரீதியான முறைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், செம்மணி புதைகுழியில் பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் மூலம் இதுவரை சுமார் 574 பேருக்குரிய எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பேராசிரியர் ராஜ் சோமதேவவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த அகழ்வுப் பணிகள், யாழ்ப்பாணம் நீதவான், சம்பந்தப்பட்ட தரப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் குற்றம் இடம்பெற்ற இடத்தைப் பரிசோதிக்கும் அதிகாரிகள் ஆகியோரின் தொடர்ச்சியான மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும், 2025 ஏப்ரல் 29ஆம் திகதிய நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகமும் (OMP) பார்வையாளராக இச்செயற்பாட்டில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றது.
பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்துள்ள அறிக்கையானது, எலும்புக்கூட்டு எச்சங்கள் புதைக்கப்பட்டிருந்த தொல்லியல் சூழல் தொடர்பான தடயவியல் தொல்லியல் அறிக்கையே (Forensic Archaeological Report) தவிர, சட்ட வைத்திய அறிக்கை அல்ல எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
மரணத்திற்கான காரணம் மற்றும் மரணம் நிகழ்ந்த விதம் தொடர்பான சட்ட வைத்திய அறிக்கையைத் தயாரிக்கும் நடவடிக்கைகள், நீதவானின் உத்தரவின் பேரில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவன் மற்றும் அவரது குழுவினரால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் மேம்பட்ட DNA பகுப்பாய்வு வசதிகள் தற்போது இல்லாத காரணத்தினால், நீதிமன்றம் உத்தரவிடும் பொருத்தமான சந்தர்ப்பத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்களை அடையாளம் காண்பதற்கான DNA பரிசோதனைகளை மேற்கொள்ள மாதிரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பவும், சர்வதேச தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் அரசாங்கம் முழுமையாகத் தயாராக உள்ளதாக அமைச்சர் உறுதியளித்தார்.
விஞ்ஞான ஆதாரங்களின் அடிப்படையில் உண்மையைக் கண்டறிவதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதுமே அரசாங்கத்தின் ஒரே நோக்கமாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இனம், மதம் அல்லது சாதி வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாது சட்டத்திற்கு அமைவாக விசாரணைகள் நிறைவு செய்யப்படும் என்றும், இந்த உணர்வுபூர்வமான விடயத்தை அரசியல்மயப்படுத்த வேண்டாம் என அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.








