பலவந்த ஜனாஸா எரிப்பு விவகாரம்-விசேட பாராளு
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகப் பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதனைத் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், கொவிட் காலத்தில் சுகாதார வழிகாட்டல்களையும் சர்வதேச நியமங்களையும் மீறி, முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கைகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணாக முன்னெடுக்கப்பட்ட பலவந்த ஜனாஸா எரிப்பு தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தாம் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றைச் சமர்ப்பித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட போதிலும், அதனை விசாரிப்பதற்கான விசேட குழு நியமனம் தொடர்ந்தும் தாமதமாகி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இவ்விடயத்தை உடனடியாகப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயுமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கோரிக்கைக் கடிதமொன்றைக் கையளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விசேட குழுவை விரைவாக அமைக்குமாறு பாராளுமன்றத்திலும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சபாநாயகர் தலைமையில் நேற்று (20) வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில், பலவந்த ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பயணத்தில் இது முக்கியமான அடுத்தகட்ட நகர்வு எனக் குறிப்பிட்டுள்ள இம்ரான் மகரூப், விசேட குழுவின் உறுப்பினர்கள் விரைவாக நியமிக்கப்பட்டு, எவ்விதப் பாரபட்சமுமின்றி உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான அநீதி நாட்டில் எந்தவொரு சமூகத்திற்கும் இடம்பெறாத வகையில் உரிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.







