இலங்கையின் வாகன இறக்குமதிச் செயன்முறை, வாகன இறக்குமதி தொடர்பான வரிக்கொள்கைகள், மின்சார வாகனங்களின் (EV) பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களைச் சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போதே இவ் விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.
இக் கூட்டத்தில் இலங்கைச் சுங்கத் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை, அவற்றின் பெறுமதி மற்றும் அவற்றுக்கு அறவிடப்படும் வரி முறைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
வாகன இறக்குமதியின்போது எஞ்சின் கொள்ளளவு, CIF பெறுமதி மற்றும் உற்பத்தி வரி உள்ளிட்ட பல்வேறு வரிக் கூறுகளின் அடிப்படையில் வரியைக் கணக்கிடும் செயன்முறை சிக்கலானதாக இருப்பது குறித்தும், சுங்க மதிப்பீடுகளின்போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களைச் சுங்கத்திலிருந்து விடுவிக்கும்போது, சுங்கத் திணைக்களத்திற்கு மேலதிகமாகப் பல்வேறு அரச நிறுவனங்களிடமிருந்தும் அனுமதி பெற வேண்டியிருப்பதால் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பு இல்லாததால், அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் ஒருங்கிணைப்புச் சிக்கல்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
இத்தாமதங்கள் காரணமாகத் துறைமுகங்களில் கொள்கலன்களைத் தடுத்து வைக்க வேண்டிய நிலை ஏற்படுவதால், இறக்குமதியாளர்கள் மேலதிக தாமதக் கட்டணங்கள் மற்றும் களஞ்சியக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
எனவே, தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பைப் பலப்படுத்தி, இறக்குமதிப் பொருட்களை விடுவிக்கும் செயன்முறையைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், மின்சார வாகனங்களின் இறக்குமதி மற்றும் பயன்பாடு தொடர்பான ஒழுங்குமுறை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக, மின்சார வாகனங்களின் மின்கலங்களின் ஆயுட்காலம் முடிவடைந்த பின்னர், அவற்றை அகற்றுவதற்கும் மீள்சுழற்சி செய்வதற்கும் நாட்டில் தெளிவான பொறிமுறை இல்லாமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும்போதே, அவற்றின் மின்கலங்களின் ஆயுட்காலம் முடிவடைந்த பின்னர் அவற்றை அகற்றுவது அல்லது மீள்சுழற்சி செய்வது தொடர்பான பொறுப்பை இறக்குமதியாளர்கள் அல்லது உற்பத்தியாளர்களிடமிருந்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், மின்சார வாகனங்கள் மற்றும் அவற்றின் மின்கலங்களுக்கான தரநியமங்கள், சுங்க வரிகளைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படும் HS குறியீடுகளை முறையாக அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் ஆராயப்பட்டது.
மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகத் தற்போதைய வரிக்கொள்கைகளை எளிமைப்படுத்துவதுடன், சாதாரண மக்களும் கட்டுப்படியான விலையில் மின்சார வாகனங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வரிக்கொள்கைகளைத் தயாரிக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக, மின்சார வாகனங்களை மின்னேற்றம் செய்யும்போது தேசிய மின்கட்டமைப்பில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைப்பதற்காக, சூரிய சக்தி மற்றும் மின்சாரச் சேமிப்பு மின்கலக் கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதற்கமைய, மின்சார வாகன இறக்குமதி மற்றும் பயன்பாட்டிற்கான வரிச் சலுகைகள் மற்றும் கொள்கை ரீதியான ஊக்குவிப்புகளை அறிமுகப்படுத்துதல், சர்வதேச தரங்களுக்கு அமைய சுங்க வகைப்படுத்தல் மற்றும் HS குறியீடுகளைப் புதுப்பித்தல், அத்துடன் பாவனையிலிருந்து நீக்கப்படும் மின்கலங்களைச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் முகாமைத்துவம் செய்வதற்கான முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.







