வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, எதிர்வரும் திங்கட்கிழமை (23) அனைத்துக் கிளைச் சங்கங்களின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு அச்சங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இக்கூட்டம் நடைபெறவுள்ளதுடன், அக் காலப்பகுதியில் அவசர சிகிச்சைச் சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் நிறைவேற்றுச் சபைக்கு வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நிறைவேற்றுச் சபை தீர்மானிக்கும் எனவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் தமக்குரிய கொடுப்பனவுகளில் கணிசமான பகுதியைத் தியாகம் செய்து, 4.4 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் சேமித்துக் கொடுத்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தொழில் வல்லுநர்கள் என்ற வகையில் வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அநீதிக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகச் சாதகமான நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்த்ததாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், கடந்த நவம்பர் 12ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நாடளாவிய ரீதியிலுள்ள வைத்திய சமூகத்தினர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய, இந்நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த 19ஆம் திகதி அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றதாகவும், இதன்போது வைத்திய சமூகத்திற்காக ஐந்து பிரதான கோரிக்கைகளை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கோரிக்கைகள் பின்வருமாறு:
- 2018ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட முழுமையான DAT கொடுப்பனவை உடனடியாக வழங்குதல்.
- DAT கொடுப்பனவு மற்றும் மேலதிக கடமை, விடுமுறை தினக் கொடுப்பனவுகளுக்கு வரி விலக்கு அளித்தல்.
- இரண்டு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ள மேலதிக கடமை மற்றும் விடுமுறை தினக் கொடுப்பனவுகளின் மூன்றில் ஒரு பங்கை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுத்தல்.
- தகைமை பெற்றுள்ள வைத்தியர்களை 22/99 சுற்றுநிருபத்திற்கு அமையப் போக்குவரத்து வசதிகளுக்காக உள்வாங்குதல்.
- வைத்தியர்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வரிச் சலுகையுடனான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை நடைமுறைப்படுத்துதல்.
மேலும், எதிர்வரும் வாரத்தில் இவ்விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலொன்றை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் வாரத்தில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பொதுமக்களையும் இவ்விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
வைத்தியர்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் என எதிர்பார்ப்பதாகவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.







