2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர் – அதிபர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 30ஆம் திகதி சுகயீன விடுமுறைத் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இன்று (21) கொழும்பில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,தற்போதைய பொருளாதாரச் சூழலில் ஆசிரியர் – அதிபர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தவில்லை.
இதன் காரணமாகவே எதிர்வரும் 30ஆம் திகதி சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம்.எதிர்வரும் முதலாம் திகதி வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டே 30ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம். எனவே, வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.








