ஹட்டன் பொதுச் சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேலும் பல அனுமதியற்ற கட்டுமானங்கள் இன்று (20) இடித்து அகற்றப்பட்டுள்ளன.
நகர அபிவிருத்தி நடவடிக்கைக்கு பொதுச் சந்தை வர்த்தகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் வருமான நிர்வாகி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால், பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த அனுமதியற்ற கட்டுமானங்கள் இடித்து அகற்றப்பட்டன.
தற்போதைய அரசாங்கத்தின் ‘வாழும் நகரம்’ (Living City) திட்டத்தின் கீழ், நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ஹட்டன் நகரை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, முறையற்ற வகையில் அமைந்துள்ள ஹட்டன் பொதுச் சந்தை வளாகத்தை ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொதுச் சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுவதற்கு நகரசபை நிர்வாகம் தீர்மானித்துள்ளதுடன், கடந்த 19ஆம் திகதி முதல் அந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த அபிவிருத்தித் திட்டத்தின் பின்னர், அனுமதியற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கும் தேவையான வசதிகளுடன் தனியான இடமொன்றை அமைத்துக்கொடுக்க நகரசபை கவனம் செலுத்தியுள்ளது.
இதன் மூலம், நுகர்வோர் இலகுவாக நடமாடக்கூடிய வகையில் சந்தை வளாகத்தை ஒழுங்கமைக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹட்டன் நகரம் அபிவிருத்தி செய்யப்படுவதன் மூலம் தமது வியாபார நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என பொதுச் சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.








