Afra Ansar
COLOMBO
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கை இளைஞர் அணோஜன் சிவராசாவின் விவகாரத்தை கையாள்வதில் வெளியுறவு அமைச்சின் நடவடிக்கைகளில் பல நிர்வாகக் குறைபாடுகள் காணப்படுவதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
புனித நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையிலோ அல்லது எந்தவொரு மதத்தின் நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையிலோ வெளியிடப்படும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அணோஜன் சிவராசா வெளியிட்ட கருத்துகளை முற்றாக நிராகரிப்பதாகவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், அதேவேளை இந்தச் சம்பவத்தின் பின்னணியை நடுநிலையுடன் அணுக வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கல்முனைப் பகுதியில் நாய் ஒன்று தாக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரிதுபடுத்தப்பட்டதன் பின்னணியில், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த சில சமூக வலைத்தளப் பதிவாளர்களிடையே மதவாத மோதல்கள் தீவிரமடைந்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே அணோஜன் உணர்ச்சிவசப்பட்டு தவறான கருத்தைப் பதிவிட்டதாகவும் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
எனினும், தனது தவறை உணர்ந்து சில நிமிடங்களிலேயே அந்தப் பதிவை அணோஜன் நீக்கியதுடன், பகிரங்கமாக மன்னிப்பும் கோரியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சவூதி அரேபியாவின் அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றினால் ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாகவும், பின்னர் அரசு தரப்பு மற்றும் பிரதிவாதி தரப்பு மேல்முறையீடுகளைத் தொடர்ந்து தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரஜையின் உயிரைப் பாதுகாப்பதற்காக தூதரக வழிமுறைகளில் தகவல்களைத் திரட்டி, சவூதி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வரும் அரசாங்கத்தின் முயற்சிகளை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், அதேவேளை இந்த வழக்கைக் கையாள்வதில் வெளியுறவு அமைச்சின் செயல்பாடுகளில் காணப்படும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மேல்முறையீடு செய்வதால் தண்டனை குறைவதற்கான வாய்ப்பு குறைவாகவும், தண்டனை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் சவூதி வழக்கறிஞர் எச்சரித்திருந்த போதிலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அது தொடர்பில் தெளிவான வழிகாட்டல் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆகஸ்ட் 24ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் நகல் செப்டம்பர் 16ஆம் திகதி, நீதிமன்றத் தீர்ப்புக்கு ஒரு நாள் முன்னதாகவே குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சின் செயலாளரின் கணக்கில் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் 1.89 மில்லியன் ரூபாய் சட்டக் கட்டணம் மற்றும் வழக்கில் ஆஜரான சட்டத்தரணியின் விபரங்கள் தொடர்பிலும் குடும்பத்தினருக்கு போதிய தகவல்கள் வழங்கப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் தூதரகம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரே, அணோஜன் தனது குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை குறித்த செய்தி வெளியான பின்னர், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த சிலர் மீண்டும் சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சுகளிலும் மதவாத மோதல்களிலும் ஈடுபடுவது ஆபத்தான போக்கு என இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் உணர்ச்சிவசப்பட்டு வெளியிடப்படும் கருத்துகள் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை இளைஞர்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை இரு சமூகங்களையும் சேர்ந்த பொதுமக்கள் உணர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோன்ற சட்டச் சிக்கல்களில் மேலும் இலங்கை பிரஜைகள் சிக்குவதைத் தடுக்கும் வகையில் அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு அந்நாடுகளின் கடுமையான தகவல் தொழில்நுட்ப மற்றும் மத அவமதிப்புச் சட்டங்கள் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மூலம் கட்டாய விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உள்நாட்டில் இணையவழியாக இன மற்றும் மத வெறுப்புணர்வைத் தூண்டும் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் அவகாசம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அரசாங்கம் காலதாமதமின்றி அனுபவம் வாய்ந்த சுயாதீன சவூதி சட்டத்தரணிகளை நியமித்து வலுவான சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
மேலும், ஜனாதிபதி சவூதி அரேபிய மன்னருக்கு நேரடி இராஜதந்திர முறையீட்டை விடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அணோஜன் தனது தவறை உணர்ந்து உடனடியாகப் பதிவை நீக்கி பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளமை, அவரது இள வயது மற்றும் குடும்பச் சூழல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு மன்னிப்பு வழங்கி தாய்நாட்டுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் தனது உச்சகட்ட இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இம்ரான் மகரூப் வலியுறுத்தியுள்ளார்.








