Afra Ansar
COLOMBO
வடக்கு சிரியாவின் அலெப்போ நகருக்கு அருகிலுள்ள ஆயுதக் களஞ்சியத்தில் இடம்பெற்ற தொடர் சக்திவாய்ந்த வெடிப்புகளில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
அலெப்போ நகருக்கு தெற்கே உள்ள அல்-ஈஸ் நகருக்கு அருகிலுள்ள சிரிய இராணுவ தளத்தில் திங்கட்கிழமை அதிகாலை இந்த வெடிப்புகள் இடம்பெற்றதாக அரச ஊடகமான SANA செய்தி வெளியிட்டுள்ளது.
வெடிப்புக்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
சம்பவ இடத்திலிருந்து நான்கு காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அலெப்போவின் சிவில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரி பைசல் மொஹமட் அலி தெரிவித்துள்ளார்.
முதல் வெடிப்பைத் தொடர்ந்து மேலும் பல வெடிப்புகள் இடம்பெற்றதாக அலெப்போவிலிருந்து செய்தியளித்த Al Jazeera செய்தியாளர் ஒபைதா ஹிட்டோ தெரிவித்துள்ளார். வெடிப்புச் சத்தங்கள் பல கிலோமீற்றர் தொலைவிலும் கேட்கப்பட்டதாகவும், சம்பவ இடத்தை நோக்கி ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பொதுமக்கள் தற்காலிகமாக வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அலெப்போ ஆளுநர் அஸ்ஸாம் அல்-காரிப் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் மற்றும் அவசரகால மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சம்பவ இடத்திற்குச் செல்லும் வீதிகள் மூடப்பட்டுள்ளதாக அலெப்போ உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அலெப்போவின் ஹம்தானியேஹ் பகுதியில் வசிக்கும் ஒருவர் AFP செய்தி நிறுவனத்திடம், மிகப்பெரிய வெடிப்புச் சத்தத்தைக் கேட்டதாகவும், பின்னர் வீட்டின் கூரைக்குச் சென்றபோது தொலைவில் பெரிய தீப்பிழம்புகளைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் கடந்த சில காலங்களில் இதுபோன்ற பல வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 2024ஆம் ஆண்டின் இறுதியில் நீண்டகால ஆட்சியாளரான பஷர் அல்-அசாத் பதவி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு தசாப்தத்துக்கும் மேலான உள்நாட்டுப் போரிலிருந்து சிரியா மீண்டு வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை டெய்ர் அஸ்-சோர் மாகாணத்தில் உள்ள இராணுவத் தளத்தில் ஏற்பட்ட அடையாளம் தெரியாத வெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர்.
மேலும், இந்த மாத தொடக்கத்தில் வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமான ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 14 பேர் உயிரிழந்ததுடன் 11 பேர் காயமடைந்தனர்.
அதே பகுதியில் அதற்கு ஒரு வாரத்துக்கும் முன்னர், வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்திருந்தனர்.
(Al Jazeera)








