2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் வருடாந்த கடலுணவு ஏற்றுமதி வருமானத்தை 680 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக இலங்கை கடலுணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் (SEASL) தெரிவித்துள்ளது.
எனினும், இதனை அடைவதற்கு இத்துறையில் தொடர்ச்சியான முதலீடுகள், மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சாதகமான வர்த்தகக் கொள்கைகள் அவசியம் என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை வரவேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் முன்மொழிந்துள்ள முதலீட்டு ஊக்குவிப்புகள், மீன்பிடித்துறை அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வர்த்தக மறுசீரமைப்புகள் இலங்கையின் கடலுணவு ஏற்றுமதிப் போட்டித்தன்மையை வலுப்படுத்தும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, தகுதிபெறும் பாரியளவிலான மீன்பிடித்துறை நிறுவனங்களுக்கு வருடாந்தம் 5 சதவீத வட்டி வீதத்தில் அதிகபட்சமாக 500 மில்லியன் ரூபா வரை கடன் வழங்கும் சலுகை நிதித் திட்டத்தை சங்கம் வரவேற்றுள்ளது.
அத்துடன், குறைந்தபட்சம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில், முதலீட்டுச் சபையின் (BOI) அங்கீகாரம் பெற்ற ஏற்றுமதி நோக்கிலான உற்பத்தி முதலீடுகளுக்கு 200 சதவீத அதிகரிக்கப்பட்ட மூலதனக் கொடுப்பனவை வழங்கும் முன்மொழிவும் இத்துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடலுணவுப் பதப்படுத்தல், நவீன தொழில்நுட்பம் மற்றும் குளிர்சங்கிலி உட்கட்டமைப்பு வசதிகளில் முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கை 246.12 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடலுணவுகளை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், இதில் பெறுமதி சேர்க்கப்பட்ட கடலுணவுப் பொருட்கள் மூலம் 64 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
மொத்த கடலுணவு ஏற்றுமதி வருமானத்தில் பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களின் பங்களிப்பு 2022ஆம் ஆண்டில் வெறும் 4 சதவீதமாகக் காணப்பட்ட நிலையில், 2026 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் அது 26 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு மாகாண மீன்பிடித்துறை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 5 பில்லியன் ரூபா ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளதையும் சங்கம் வரவேற்றுள்ளது.
இதன் கீழ் பேசாலை துறைமுகம் மற்றும் மீன்பிடி நங்கூரமிடும் இடங்களை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, நிலைபேறான மீன்பிடி வள முகாமைத்துவத்திற்காக 1 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளமையும் வரவேற்கத்தக்கது என சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த முதலீடுகள் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், கரையோர மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும் நிலைபேறான கடலுணவு உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, சுங்க நடைமுறைகளில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்புகள், ஏற்றுமதிச் செயற்பாடுகளுக்கான தற்காலிக இறக்குமதித் திட்டத்தின் (TIEP) மேம்பாடு மற்றும் வர்த்தகத்திற்கான தேசிய ஒற்றைச் சாளரக் கட்டமைப்பு ஆகியவற்றையும் சங்கம் வரவேற்றுள்ளது.
இவை ஏற்றுமதி நடைமுறைகளை எளிமைப்படுத்தி செலவுகளைக் குறைக்க உதவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறை, குறிப்பாக இறால் வளர்ப்புத் துறையில் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் கிராமப்புற வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் ஏற்றுமதியை வலுப்படுத்துவதற்கும் கணிசமான வாய்ப்புகள் காணப்படுவதாக SEASL பிரதிநிதி திலான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனினும், வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதே ஏற்றுமதி இலக்குகளை அடைவதற்கு முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்றுமதியாளர்கள் இந்தச் சலுகைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள் இறக்குமதிகளில் தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படக் கூடாது. அத்துடன், நிலைபேறான மீன்பிடி வள முகாமைத்துவம் தேசிய முன்னுரிமையாகத் தொடர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரியான கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், 2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் கடலுணவு ஏற்றுமதி வருமானத்தை 680 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் மீன்பிடித்துறை மற்றும் கடலுணவு ஏற்றுமதித் துறையை அபிவிருத்தி செய்வதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோருக்கும் சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.







