கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் சுமார் 120 தாதியர் உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், தொழிற்சங்கப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கம் (GNOA) எச்சரித்துள்ளது.
தாதியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யக் கோரி, குறித்த வைத்தியசாலையில் இன்று (13) காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை ஒரு மணிநேர அடையாளப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் பற்றாக்குறை நோயாளர் பராமரிப்புச் சேவைகளைப் பாதித்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையில் தற்போது சுமார் 370 தாதியர் உத்தியோகத்தர்கள் பணியாற்றி வருவதாகவும், சேவைகளை முறையாக முன்னெடுப்பதற்கு மேலும் 120 தாதியர் உத்தியோகத்தர்கள் தேவைப்படுவதாகவும் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
தாதியர் பற்றாக்குறை காரணமாக, ஒவ்வொரு தாதியரும் மூன்று தாதியர்களுக்குரிய பணிச்சுமையை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்கள் கடுமையான உடல் மற்றும் உள ரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்த போதிலும், இதுவரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்காக புதிய நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மேல் மாகாண சுகாதாரச் செயலாளருக்கு அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கம் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.
இன்றைய போராட்டத்தைத் தொடர்ந்து, தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக சங்கம் மீண்டும் எச்சரித்துள்ளது.








