முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி (UNP), இளம் தலைமுறையினரைக் கட்சியில் ஈர்க்கும் நோக்கில் புதிய திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதுடன், கட்சியின் புதிய இலச்சினையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
கட்சியை நவீனமயப்படுத்துதல், இளைஞர்களின் அரசியல் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் புதிய தலைமுறையினருக்கு அரசியலில் அதிக வாய்ப்புகளை வழங்குதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சிறிகொத்தாவில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, Gen Z UNP மற்றும் Millennial UNP ஆகிய இரண்டு புதிய உறுப்பினர் பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவிக்கையில், 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த இளைஞர்களை உள்ளடக்கியதாக Gen Z UNP பிரிவு அமையும் எனக் குறிப்பிட்டார்.
அதேவேளை, 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்களை உள்ளடக்கியதாக Millennial UNP பிரிவு செயற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்காலத் தேர்தல் வெற்றிகளைப் பெறுவதற்கு பாரம்பரிய அரசியல் கூட்டணிகள் மாத்திரம் போதுமானதாக இருக்காது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னதாக வலியுறுத்தியிருந்தார்.
மாறிவரும் இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அரசியல் கட்சிகள் தங்களை மாற்றியமைத்துக்கொள்வதுடன், இளைஞர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான புதிய அணுகுமுறைகளையும் உருவாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், பாரம்பரியமான ஐந்தாண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களுக்கு அப்பால் சென்று, Green Paper திட்டத்தின் ஊடாக 20 ஆண்டுகால அபிவிருத்தித் திட்டமொன்றை உருவாக்கும் பணிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளது.
இலங்கையின் இளம் தலைமுறையினருடனான அரசியல் தொடர்புகளை விரிவுபடுத்தி, கட்சியின் அரசியல் அடையாளத்தை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தப் புதிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.








