இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று இரண்டு மில்லியனைக் கடந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இலங்கை இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை வரவேற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்த இரண்டு மில்லியனாவது சுற்றுலாப் பயணி ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது குடும்பத்தினரான தாயார் நடாலியா, தந்தை செர்கெய் மற்றும் மகள் அன்னா ஆகியோருடன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
ஆறு வருட இடைவெளிக்குப் பின்னர், 2024ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இலங்கை முதன்முறையாக இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை என்ற இலக்கை எட்டியது. தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் திகதி மீண்டும் அந்த இலக்கை அடைந்தது.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க, உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையின் சுற்றுலாத்துறை தொடர்ச்சியாக மீட்சியடைந்து வருவதையும் அதன் வலிமையையும் இந்தச் சாதனை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல்கள், சர்வதேச விமானப் போக்குவரத்து வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், விமான எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் ஆகியவற்றுக்கு மத்தியிலும் இந்த இலக்கை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2025 நவம்பரில் ஏற்பட்ட ‘டிட்வா’ அனர்த்தத்தைத் தொடர்ந்து சுற்றுலாத்துறை எதிர்கொண்ட சவால்களையும் சுட்டிக்காட்டிய அவர், அவற்றுக்கு மத்தியிலும் இத்துறை தனது வளர்ச்சிப் போக்கைத் தொடர்ந்து பேணி வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சின் தரவுகளின்படி, இவ்வாண்டு நவம்பர் 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாளாந்த சராசரி சுற்றுலாப் பயணிகள் வருகை 7,480 ஆகப் பதிவாகியுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 7,130 ஆகக் காணப்பட்டதுடன், இது சுமார் 4.9 சதவீத அதிகரிப்பாகும்.
புதிய சர்வதேச விமான சேவைகளின் அறிமுகம், நேரடி விமானப் போக்குவரத்துத் தொடர்புகளின் விரிவாக்கம், புதிய சுற்றுலாச் சந்தைகளில் பிரவேசித்தல் மற்றும் சர்வதேச சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியன இந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், சுற்றுலாத்துறை மூலம் நாட்டுக்குக் கிடைக்கும் பொருளாதார நன்மைகளையும் அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, நாணய மாற்று விகிதங்கள், பொருளாதார நிலைமைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் செலவின முறைகளில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, சர்வதேச தரங்களுக்கு அமைவாக சுற்றுலா வருமானத்தைக் கணக்கிடும் முறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், இவ்வாண்டு நிறைவடைவதற்கு முன்னர் 2025ஆம் ஆண்டில் பதிவான மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகை எண்ணிக்கையைத் தாண்டுவதே அரசாங்கத்தின் அடுத்த இலக்காகும் எனப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இதற்காக விமானப் போக்குவரத்துத் தொடர்புகளை விரிவுபடுத்துதல், சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், புதிய சந்தைகளை உருவாக்குதல் மற்றும் சுற்றுலாச் சேவைகளின் தரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தனியார் துறை, விமான நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.








