பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) வலியுறுத்தியுள்ளார்.அத்துடன், அவர் உரிய முறையில் நடத்தப்படுவதையும், சட்ட நடைமுறைகள் மதிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துமாறு பாகிஸ்தான் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
CNN தொலைக்காட்சியின் கிறிஸ்டியன் அமன்பூருக்கு (Christiane Amanpour) வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதன் போது, இம்ரான் கானின் தொடர்ச்சியான சிறைவாசம் குறித்து கவலை வெளியிட்ட வோல்கர் டர்க், பாகிஸ்தானில் நிலவும் அரசியல் பதற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
“இம்ரான் கானை விடுதலை செய்யுமாறு நான் கோருகிறேன். அவர் உரிய முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும், உண்மையில் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்றும் கோருகிறேன்” என அவர் தெரிவித்தார்.
இம்ரான் கானின் விடுதலை, பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பதற்றத்தைக் குறைப்பதற்கான நம்பிக்கையை உருவாக்கும் நடவடிக்கையாக அமையக்கூடும் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.
2018 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானின் பிரதமராகப் பதவி வகித்த இம்ரான் கான், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பல்வேறு சட்ட வழக்குகளையும் எதிர்கொண்டு வருகின்றார்.
தனக்கு எதிரான வழக்குகள் அரசியல் நோக்கங்களைக் கொண்டவை என இம்ரான் கானும், அவர் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியும் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இம்ரான் கானின் சிறைவாசம் மற்றும் சிறைச்சாலையில் அவர் நடத்தப்படும் விதம் தொடர்பில் தொடர்ச்சியாகக் கவலைகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இந்தக் கோரிக்கை வெளியாகியுள்ளது.
இதேவேளை, மனிதாபிமான அடிப்படையில் இம்ரான் கானின் விடுதலை தொடர்பில் விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் முன்மொழிவு இலங்கை நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டதைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, பாகிஸ்தானுடன் இராஜதந்திரப் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அல்லது இருதரப்பு உறவுகளைப் பாதிக்கக்கூடிய விவாதங்களில் அரசாங்கம் ஈடுபட விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார்.








