மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஈரான், சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் இன்று (22) பல முக்கியமான இராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் பதிவாகியுள்ளன.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC), பஹ்ரைனில் உள்ள இராணுவத் தளங்களில் அமைந்துள்ள அமெரிக்காவின் இரண்டு பேட்ரியட் (Patriot) வான் பாதுகாப்பு ரேடார் கட்டமைப்புகளை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இலக்கு வைத்ததாகத் தெரிவித்துள்ளது.
ஈரானின் வான்பரப்பை அமெரிக்கா மீறியதாகவும், ஹெங்காம் தீவில் அமைந்துள்ள ரேடார் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படும் சம்பவங்களுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக IRGC தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஈரானின் தாக்குதலால் தொழிற்துறை வளாகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பஹ்ரைன் அதிகாரிகள் பாதுகாப்பு அச்சுறுத்தல் நீங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஈரான் நாடாளுமன்றத்தின் வெளிவிவகார மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவின் பேச்சாளர் இப்ராஹிம் ரெசாயி, ஈரானின் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக இஸ்ரேலிய கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
ஈரானின் அச்சுறுத்தல்கள் வெறும் எச்சரிக்கைகள் அல்ல, அவை நடைமுறைப்படுத்தக்கூடியவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், யெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் மேற்கு சவூதி அரேபியாவை நோக்கி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையொன்றை இடைமறித்து அழித்துள்ளதாக சவூதி தலைமையிலான கூட்டணி அறிவித்துள்ளது.
இதனையடுத்து, மக்கா மாகாணத்திற்கான ஆபத்து எச்சரிக்கையை சவூதி அரேபியா சிறிது நேரத்திற்கு விடுத்த பின்னர் நீக்கியுள்ளது.
இதேவேளை, பஹ்ரைன் அதிகாரிகள் அந்நாட்டு மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும், மக்காவை இலக்கு வைத்து தமது அமைப்பு எந்தவொரு தாக்குதலையும் முன்னெடுக்கவில்லை என ஹூதி இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரீ மறுத்துள்ளார். தமது இராணுவ நடவடிக்கைகள் எண்ணெய் கட்டமைப்புகள் மற்றும் இராணுவத் தளங்களை மட்டுமே இலக்கு கொண்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








