2036ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான போட்டியில் இந்தியா மற்றும் கட்டார் உள்ளிட்ட ஏழு நாடுகள் இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) உறுதிப்படுத்தியுள்ளது.
ஜெர்மனி, ஹங்கேரி, துருக்கி, தென்னாப்பிரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் சர்வதேச ஒலிம்பிக் குழுவுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.
2027 மார்ச் மாதத்தில் போட்டியிடும் நாடுகளின் குறுகிய பட்டியலை சர்வதேச ஒலிம்பிக் குழு தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தெரிவாகும் நாடுகள் அடுத்தகட்டத் தேர்வு செயல்முறைக்கு முன்னேறும்.
முன்னுரிமை பெறும் போட்டி நடத்துநர்கள் 2028ஆம் ஆண்டில் அடையாளம் காணப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன், 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாட்டை சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர்கள் 2029ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இறுதியாகத் தெரிவு செய்ய உள்ளனர்.
இந்தியா முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு முயற்சித்து வருகிறது. இதற்கான திட்டங்கள் அகமதாபாத்தை மையமாகக் கொண்டுள்ளன. அகமதாபாத் நகரம் 2030ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தவுள்ளது.
இதனிடையே, ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முதல் முஸ்லிம் பெரும்பான்மை நாடாக மாறுவதற்கு கட்டார் முயற்சித்து வருகிறது. கட்டார் ஏற்கனவே 2022ஆம் ஆண்டு FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளையும் 2006ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தியுள்ளது. மேலும், 2030ஆம் ஆண்டு மீண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தவுள்ளது.
தென்னாப்பிரிக்காவும் வரலாற்றுச் சாதனையை நோக்கமாகக் கொண்டு போட்டியிடுகிறது. இதுவரை எந்தவொரு ஆப்பிரிக்க நாடும் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதில்லை.
2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் செயல்முறையில் இணைய விரும்பும் ஏனைய நாடுகள் தங்களது ஆர்வத்தை எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதிக்குள் தெரிவிக்க வேண்டும்.
2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸிலும், 2032ஆம் ஆண்டு போட்டிகள் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலும் நடைபெறவுள்ளன.








