அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாததன் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் அழைப்பாளர் துலார குணதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி சாந்த ஜயதிலக்க ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி துலார குணதிலக்க உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்ததாகவும், எனினும் அந்த மனு விசாரணைக்காக திறந்த நீதிமன்றத்தில் ஒருபோதும் அழைக்கப்படவில்லை என்றும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு அவர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.
மேலும், குறித்த மனு மீதான விசாரணை நிறைவடைந்து இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகருக்கு அறிவிப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.









