ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மீது மலையிலிருந்து பாரிய கற்பாறை உருண்டு விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (28) பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், கினிகத்தேனை களுகல பொலிஸ் காவலரணுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான குறித்த பஸ் பயணித்துக்கொண்டிருந்த போது, மலை உச்சியிலிருந்து உருண்டு வந்த பாரிய கற்பாறை பஸ்ஸின் மீது மோதியுள்ளது.
இதன்போது, பஸ்ஸின் ஆசனத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். அவரைப் பொலிஸாரும் பயணிகளும் இணைந்து கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் வழியிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் அக்கரப்பத்தனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கற்பாறை மோதியதில் பஸ்ஸும் பலத்த சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொல்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








