2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி பொல்தூவ சந்தியில் மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வித் தொழில்வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் கல்வி அமைச்சுக்கான செலவினத் தலைப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை ஒதுக்குவதாக வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலேயே தற்போதைய பிரதமர் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்ததாகச் சுட்டிக்காட்டிய அவர், ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், டிசம்பர் முதலாம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தைத் தொடர்ந்து தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களுடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை எனப் பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கடந்த 18ஆம் திகதி போராட்டமொன்றை முன்னெடுத்ததுடன், கடந்த 25ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று தமது பிரச்சினைகள் அடங்கிய மகஜரொன்றையும் கையளித்துள்ளதாக அக்குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.
குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் வரை பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் நெருக்கடியான நிலைமை உருவாகும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, அனைத்துத் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாகச் சுதந்திரத் தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக அரசாங்கம் அச்சுறுத்தும் பாணியில் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், தொழிலாளர் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக அழுத்தங்களைப் பிரயோகிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், ஆசிரியர்களால் நவம்பர் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ள போராட்ட நடவடிக்கை தீர்க்கமானதாக அமையும் எனத் தெரிவித்த அவர், அந்தப் போராட்டத்தை வெற்றியடையச் செய்வதற்குச் சுதந்திரத் தொழிற்சங்க நிலையம் முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் வலியுறுத்தினார்.







