உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவும், 11ஆவது பொதுச்சபையின் இரண்டாவது நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தொடரும் இன்று (28) இலங்கையில் ஆரம்பமாகின்றன.
நாகானந்த சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த விசேட மாநாடும் ஆண்டு நிறைவு விழாவும் இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 02ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் தற்போது இடம்பெற்று வருகிறது.
ஆரம்ப நிகழ்வு உள்ளிட்ட மாநாட்டின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பூட்டான் மன்னர் உள்ளிட்ட பௌத்த நாடுகளின் அரச தலைவர்களுக்கு விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலுமிருந்து தேரவாத, மகாயான மற்றும் வஜ்ரயான ஆகிய பௌத்த மரபுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 5,000 பிக்குகள் மற்றும் பிக்குணிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சுமார் 500 மகாசங்கத்தினரும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பொதுமக்கள் பிரதிநிதிகள் சுமார் 800 பேரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
1966ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் இறுதிக் கூட்டத்தொடர் 2024ஆம் ஆண்டு நியூசிலாந்தின் ஒக்லாந்து நகரில் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உலக அமைதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட மத வழிபாட்டு நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி மாலை அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியில் நடைபெறவுள்ளது.
மேலும், டிசம்பர் 01ஆம் திகதி ருவன்வெலிசாய மற்றும் கண்டியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையை மையமாகக் கொண்டு விசேட மத வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.








