குற்றங்களை ஒடுக்குவதன் மூலம் மாத்திரம் சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும், மக்களின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டும் என பௌத்த போதனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து பௌத்த தர்மம் எவ்வளவு நடைமுறைச் சாத்தியமானதும், காலத்துக்கு ஏற்றதுமான தத்துவம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இன்று (28) ஆரம்பமான உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது பௌத்த போதனைகளை எடுத்துக்காட்டி மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
“எந்தவொரு அரசினதும் ஸ்திரத்தன்மை அல்லது ஸ்திரமற்ற தன்மை தீர்மானிக்கப்படுவது நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களின் செயற்பாடுகளின் அடிப்படையிலாகும்.
ஆட்சியாளர் தர்மவந்தராகவும், கொள்கைப்பற்றுள்ளவராகவும் இருந்தால் நாடு சுபீட்சத்தை நோக்கிப் பயணிக்கும். ஆட்சியாளர் ஊழல்வாதியாகவும், அதர்மவாதியாகவும் இருந்தால் முழு நாடும் அராஜக நிலைக்குத் தள்ளப்படும்.
இந்த விடயம் சகலவிதமான அரசுகளுக்கும் பொருந்தும். அதனால்தான் பௌத்த தர்மம் நடைமுறைச் சாத்தியமானதும், எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதுமான தர்மமாகத் திகழ்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழா களனி நாகானந்த சர்வதேச பல்கலைக்கழகக் கேட்போர் கூடத்தில் நடைபெறுகிறது.
இதில் உலக பௌத்த சங்க சம்மேளனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 50 நாடுகளைச் சேர்ந்த தலைமைத் தேரர்கள், பொதுமக்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர்.
1966 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் பிரதான நோக்கம் உலக அமைதியை ஏற்படுத்துவதாகும்.
இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு நாகானந்த ஆய்வு நிறுவனத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் கலந்துகொண்டனர்.
மேலும், உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 11 ஆவது பொதுச்சபையின் இரண்டாவது நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தொடர் உள்ளிட்ட பல்வேறு மத நிகழ்வுகள் நாளை முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளன.








