இலங்கையின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை (25) இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் ஐந்து பெண்கள் மற்றும் 13 வயது சிறுமி உட்பட எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் 13 முதல் 80 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய, ருவன்வெல்ல, கறுவாத்தோட்டம், தலங்கம, மாபாகே, கிராண்ட்பாஸ், நோர்வூட் மற்றும் மஹவ ஆகிய பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
குளியாப்பிட்டிய: புகல்ல சந்திக்கு அருகில் லொறியொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதிய பின்னர், முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் 73 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் சிறுவன் ஒருவர் உட்பட மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
ருவன்வெல்ல: அவிசாவளை – கேகாலை வீதியில் பேருந்துடன் நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மோதியதில், ரம்புக்கனையைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கறுவாத்தோட்டம்: கொழும்பு, J.O.C. சந்திக்கு அருகிலுள்ள பாதசாரிகள் கடவையில் வீதியைக் கடந்துகொண்டிருந்த கோட்டையைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணொருவர் மீது பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளார்.
தலங்கம: கம்புறுகமுவையைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணொருவர் மோட்டார் சைக்கிளில் பின்னிருக்கைப் பயணியாகச் சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு கார்களுடன் தொடர்புடைய விபத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பெண்ணும் காயமடைந்துள்ளார்.
மாபாகே: கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் இடதுபுறம் திரும்ப முற்பட்ட பிரைம் மூவர் ரக வாகனம், துவிச்சக்கர வண்டியில் பயணித்த ராகமையைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணுடன் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
கிராண்ட்பாஸ்: ஆர்தர் டி சில்வா மாவத்தையில் லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் களனியைச் சேர்ந்த 80 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார்.
நோர்வூட்: வெஞ்சர் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வாடகை வாகனத்தின் பின்புறத்திலிருந்து தவறி விழுந்த 13 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த அவர் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மஹவ: நிகவெரட்டிய – சியம்பலங்கமுவ வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மீரிகமையைச் சேர்ந்த 28 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பின்னிருக்கைப் பயணியாகச் சென்ற பெண்ணொருவரும் காயமடைந்துள்ளார்.
இந்த எட்டு விபத்துகளில் ஏழு விபத்துகளுடன் தொடர்புடைய எட்டு வாகன சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








