நியாயமற்ற தொழில்துறை நடைமுறைகள் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட 14 முக்கிய வர்த்தக நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்கா முன்மொழிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த முன்மொழிவில் நாடுகள் மற்றும் பொருட்களுக்கு ஏற்ப வெவ்வேறு வரி விகிதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, சீனாவின் சில பொருட்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரிகளுடன் சேர்த்து 40 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனங்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்துவதாக வாஷிங்டன் கருதும் தொழில்துறை மானியங்கள் மற்றும் ஏனைய வர்த்தக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்மொழியப்பட்டுள்ளது.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, சீனாவுக்கு அதிகபட்சமாக 20 சதவீத மேலதிக வரி விதிக்க அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. இந்த வரி ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில வரிகளுடன் சேர்த்து அறவிடப்படும்.
இந்தப் புதிய வரி முன்மொழிவில் இலக்கு வைக்கப்பட்டுள்ள 14 வர்த்தக நாடுகள் வருமாறு:
- சீனா
- இந்தியா
- பங்களாதேஷ்
- கம்போடியா
- ஐரோப்பிய ஒன்றியம்
- இந்தோனேசியா
- ஜப்பான்
- தென்கொரியா
- மலேசியா
- சிங்கப்பூர்
- சுவிட்சர்லாந்து
- தாய்வான்
- தாய்லாந்து
- வியட்நாம்
இந்நிலையில், இந்தப் புதிய வரி முன்மொழிவில் இலங்கை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் 301ஆவது பிரிவின் கீழ், தொழில்துறை மானியங்கள் மற்றும் அதிகப்படியான உற்பத்தித் திறன் தொடர்பாக எட்டு மாத கால விசாரணை முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்மொழியப்பட்டுள்ளது.
இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னர், முன்மொழியப்பட்ட வரிகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்படவுள்ளன. இதனையடுத்து, 2027 ஜனவரி மாதம் முதல் இவை நடைமுறைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய வர்த்தகப் பதற்றங்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்த வரி விதிப்புகள் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்த கவலைகளும் எழுந்துள்ளன.








