ஜிபூட்டியின் ஒபொக் (Obock) பிராந்தியத்திற்கு வடக்கே படகொன்று கவிழ்ந்ததில், குறைந்தது 109 குடியேறிகள் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 116 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச குடியேற்ற அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 8ஆம் திகதி இரவு முதல் 9ஆம் திகதி அதிகாலை வரையான காலப்பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் 15 சிறுவர்களும் உள்ளடங்குவதாக ஒக்டோபர் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த படகில் 350 பேர் யெமன் நோக்கிப் பயணித்ததாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 80 இற்கும் மேற்பட்டோர் உயிர் பிழைத்துள்ளதுடன், அவர்கள் அனைவரும் எத்தியோப்பியப் பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக, ஜிபூட்டிய அதிகாரிகளுடன் இணைந்து சர்வதேச குடியேற்ற அமைப்பின் குழுக்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
குடியேறிகள் பலர் வளைகுடா நாடுகளைச் சென்றடையும் நோக்கில், பாப் அல் மண்டெப் (Bab al-Mandeb) நீரிணையைக் கடந்து யெமனுக்குச் செல்லும் ஆபத்தான கடல் வழியைப் பயன்படுத்துகின்றனர்.
வறுமை, பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் அதிகரித்து வரும் தாக்கங்கள் காரணமாகப் பலர் இவ்வாறான ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதாக சர்வதேச குடியேற்ற அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதி முதல் எத்தியோப்பியாவிலிருந்து ஜிபூட்டிக்குள் 20,000 இற்கும் அதிகமான குடியேற்றப் பயணங்கள் பதிவாகியுள்ளன.
அதேவேளை, ஜிபூட்டியில் ஆபத்தான குடியேற்றப் பாதைகளில் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து சிக்கித் தவித்து வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.







