கொங்கோவில் இடம்பெற்ற விமான விபத்தில் இரண்டு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொங்கோவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கிக்வித் நகரிலிருந்து கின்ஷாசா நோக்கிப் புறப்பட்ட விமானமே கெங்கே பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தில் லெப்டினென்ட் ஜெனரல் முதும்போ கடாளை தியண்டே மற்றும் லெப்டினென்ட் ஜெனரல் பகுமி லிகுலியா ஆகிய இரண்டு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், கெங்கே பகுதியில் விமானம் சென்றுகொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 14 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த தகவலை கொங்கோ இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் எபோமி எகெங்கே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என விமானப் போக்குவரத்து கழகத் தலைவர் டிரைபோன் கின்-கை தெரிவித்துள்ளார்.விபத்துக்கான காரணத்தை கண்டறியும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.







