மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பல்வேறு இணையச் சேவைகளில் இன்று (13) வியாழக்கிழமை ஏற்பட்ட பரவலான தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Downdetector.com என்ற இணையச் சேவைகளின் செயலிழப்பைக் கண்காணிக்கும் இணையத்தளத்தின் தகவலின்படி, பிற்பகல் 1 மணிக்கு சற்று முன்னதாக இந்தத் தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் Microsoft 365, Outlook மற்றும் Microsoft Teams ஆகிய சேவைகளைப் பயன்படுத்துவதில் பயனர்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, Outlook சேவையில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் சுமார் 130,000 பயனர்கள் முறைப்பாடுகளைப் பதிவு செய்திருந்தனர்.
இதற்கிடையில், Amazon Web Services (AWS) மற்றும் Google சேவைகளைப் பயன்படுத்துவோரும் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து அதே இணையத்தளத்தில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பில் CNBC ஊடகத்துக்கு அறிக்கையொன்றை வழங்கிய மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பேச்சாளர், Microsoft 365 சேவைகளில், குறிப்பாக Exchange Online சேவையில் பயனர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து தாம் அறிந்துள்ளதாகவும், அவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சேவைகளை விரைவாக வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், வாடிக்கையாளர்களின் பொறுமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செயலிழப்பு தொடர்பான அறிவிப்புகளை மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது Microsoft 365 Status என்ற அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கின் ஊடாக வெளியிட்டுள்ளது.
இதேவேளை, தமது சேவைகள் வழமைபோன்று இயங்குவதாக Amazon நிறுவனம் X தளத்தில் தெரிவித்துள்ளது. இணையத்தின் வேறொரு பகுதியில் ஏற்பட்ட தொடர்பற்ற இடையூறு காரணமாகத் தவறான செய்திகள் வெளியாகி வருவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சேவைகளின் உண்மையான நிலவரத்தை அறிந்துகொள்ளத் தமது Service Health Dashboard பக்கத்தைப் பார்வையிடுமாறும் Amazon பயனர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மாலை 4 மணியளவில், பாதிக்கப்பட்ட சில சேவையகங்களை மீண்டும் இயங்கச் செய்வதற்கான மாற்று சேவைநலச் சரிபார்ப்பு முறையொன்றை உறுதிப்படுத்தியுள்ளதாக மைக்ரோசொப்ட் அறிவித்தது.
இந்த மாற்றத்தைப் பரந்த அளவில் நடைமுறைப்படுத்தி வருவதுடன், பதிலளிக்காத சேவையகங்களைக் கண்டறிந்து தானாகவே மீள ஆரம்பிக்கும் தானியங்கி மீட்பு கட்டமைப்புகளையும் தயாரித்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில், பல பிராந்தியங்களில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் உட்கட்டமைப்பில் ஏற்பட்ட அதிகப்படியான சேவைச் சுமையே இந்தத் தொடர்புச் சிக்கல்களுக்குக் காரணம் என அறிவிக்கப்பட்டது.
எனினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எதிர்பாராத விதமாகப் பல சேவையகங்கள் செயலிழந்ததால் ஏனைய சேவையகங்கள் மீது அதிக சுமை ஏற்பட்டுள்ளதாகவும், சில சேவையகங்கள் தானியங்கி செயல்நிலைச் சரிபார்ப்பில் தோல்வியடைந்துள்ளதாகவும் நிறுவனம் கண்டறிந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சேவையகங்களை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், மேலும் சேவையகங்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது.
(CNBC)








