ஈரான் தனது அண்டை நாடுகள் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகள் காரணமாக சர்வதேச வர்த்தகம், எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஜி7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஜி7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலேயே இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் பொதுமக்களுக்குச் சொந்தமான உட்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ள அமைச்சர்கள், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழான தனது கடப்பாடுகளை ஈரான் மதித்து நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், ஹோர்முஸ் நீரிணையில் பொதுமக்களுக்குச் சொந்தமான கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த செப்டெம்பர் 27ஆம் திகதி பிரித்தானியாவின் RAF Fairford விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் ஈரானுக்குத் தொடர்பு இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ள குற்றச்சாட்டையும் ஜி7 அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தமது இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஜி7 நாடுகள் ஒன்றுபட்டு நிற்பதாகவும், அதற்கான உறுதிப்பாட்டில் தொடர்ந்து நிலைத்திருப்பதாகவும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சவூதி அரேபியா மீது யேமனின் ஹூதி கிளர்ச்சிப் படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களையும் ஜி7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் குறிப்பிட்டுக் கண்டித்துள்ளனர்.







