அமெரிக்காவின் மிக உயர்ந்த பயண எச்சரிக்கை நிலையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 23 நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கையில், நிலை 4 – பயணம் செய்ய வேண்டாம் (Level 4 – Do Not Travel) என்ற பிரிவின் கீழ் குறித்த நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதன்படி, ஆப்கானிஸ்தான், பெலாரஸ், புர்கினா பாசோ, மியன்மார், மத்திய ஆபிரிக்கக் குடியரசு, சாட், கொங்கோ ஜனநாயகக் குடியரசு, ஹெய்ட்டி, ஈரான், ஈராக், லெபனான், லிபியா, மாலி, நைஜர், வட கொரியா, ரஷ்யா, சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா, உகண்டா, உக்ரைன் மற்றும் யேமன் ஆகிய 23 நாடுகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுத மோதல்கள், பயங்கரவாதத் தாக்குதல்கள், கடத்தல்கள், உள்நாட்டுக் கலவரங்கள் உள்ளிட்ட உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பு அபாயங்கள் நிலவும் நாடுகளுக்கே இவ்வாறான உயர்மட்ட பயண எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.
குறித்த நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கக் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ள இராஜாங்கத் திணைக்களம், ஏற்கனவே அந்நாடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது அதனைப் பரிசீலிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், சில நாடுகளில் அவசரநிலைகளின்போது அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய உதவிகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த எச்சரிக்கைகள் அனைத்தும் புதிதாக வெளியிடப்பட்டவை அல்ல எனவும், ஒவ்வொரு நாட்டுக்குமான பயண எச்சரிக்கைகள் வெவ்வேறு காலப்பகுதிகளில் மீளாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வெளிநாட்டுப் பயணங்களைத் திட்டமிடுவதற்கு முன்னர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறித்த நாடுகளுக்கான அண்மைய பயண எச்சரிக்கைகளைப் பார்வையிடுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








