வளைகுடா ஒத்துழைப்பு பேரவையின் (GCC) உறுப்பு நாடுகளுக்கான ஒருங்கிணைந்த இராணுவக் கட்டளையின் முன்னணி தலைமையகத்தை குவைத்தில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் உள்ளிட்ட அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து உறுப்பு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பமான ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரிலிருந்து கிடைத்த அனுபவங்களின் அடிப்படையிலேயே வளைகுடா நாடுகள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அல்-மதார் அரசியல் ஆய்வு மையத்தின் பணிப்பாளர் சாலிஹ் அல்-முதைரி தெரிவித்துள்ளார்.
அல் ஜசீராவுக்கு வழங்கிய கருத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், வளைகுடா நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பு என்பது ஒப்பந்தங்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட முடியாது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அவசர நிலைமைகளுக்கு விரைவாகப் பதிலளிக்கக்கூடிய இராணுவ வலிமையும், ஒருங்கிணைந்த பாதுகாப்பு மற்றும் இராணுவக் கட்டளை மையமும் அவசியம். குறிப்பாக, முன்கூட்டிய எச்சரிக்கை வழங்கும் கட்டமைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஈரானுக்கு அண்மையில் அமைந்துள்ளதுடன், ஈராக் எல்லையையும் பகிர்ந்துகொண்டு வளைகுடாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள குவைத்தின் புவியியல் அமைவிடம், இத்தகைய இராணுவத் தலைமையகத்தை நிறுவுவதற்கு மூலோபாய ரீதியாகப் பொருத்தமானதாக அமைகிறது.
இதன் மூலம் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்ட தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து, வளைகுடா நாடுகள் அனைத்துக்கும் எச்சரிக்கை வழங்கக்கூடிய மையமாக குவைத் தலைமையகம் செயற்பட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமையகத்தில் பங்கேற்கவுள்ள இராணுவப் படைகளின் தன்மை மற்றும் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை தெளிவான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
மேலும், 2013ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் ரியாத்தில் நிறுவப்பட்ட வளைகுடா நாடுகளின் தற்போதைய ஒருங்கிணைந்த இராணுவக் கட்டளையுடன் புதிய தலைமையகம் ஒருங்கிணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது, வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக் கொள்கையில் கூட்டு பாதுகாப்பை மையப்படுத்திய புதிய மூலோபாய மாற்றத்தின் ஒரு பகுதியாக அமைகிறது என அல்-முதைரி சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்: அல் ஜசீரா







