அப்ரா அன்சார்
(ஊடகவியலாளர்)
ஏழு ஆண்டுகால விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னர், மியன்மாரின் சிறுபான்மை ரோஹிங்கியா சமூகத்தினருக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றதாக சர்வதேச நீதிமன்றம் (ICJ) தீர்ப்பளித்துள்ளது.
நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை (19) வழங்கிய இந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 1945ஆம் ஆண்டு நிறுவப்பட்டதன் பின்னர், இனப்படுகொலை தொடர்பாக இந் நீதிமன்றம் வழங்கிய முதலாவது தீர்ப்பு இதுவாகும்.
பெரும்பான்மையாக முஸ்லிம்களைக் கொண்ட ரோஹிங்கியா சமூகத்தினருக்கு இந்தத் தீர்ப்பு சர்வதேச அங்கீகாரத்தையும் நீதிக்கான நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 12 இலட்சம் ரோஹிங்கியா மக்கள் பங்களாதேஷில் நெருக்கடியான அகதி முகாம்களில் தங்கியுள்ளதுடன், மேலும் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானோர் மியன்மாரில் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
பல தசாப்தங்களாக மியன்மார் இராணுவம் மற்றும் ரோஹிங்கியா அல்லாத ஆயுதக் குழுக்களால் துன்புறுத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளை எதிர்கொண்டுள்ள ரோஹிங்கியா மக்களின் துயரங்களுக்கு இந்தத் தீர்ப்பு சர்வதேச அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பு உலகின் பல்வேறு பகுதிகளில் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் சமூகங்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இனப்படுகொலைக்கான அரசாங்கத்தின் நோக்கத்தை நிரூபிப்பதில் புதிய சட்ட முன்னுதாரணத்தை இது உருவாக்கியுள்ளது.
இனப்படுகொலை செய்வதற்கான வெளிப்படையான எழுத்துப்பூர்வ உத்தரவுகள் இல்லாத நிலையிலும், அரசாங்கத்தின் நோக்கத்தை எவ்வாறு நிரூபிக்க முடியும் என்பதற்கு இந்த வழக்கு முக்கிய முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
காஸா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக தென்னாபிரிக்கா தாக்கல் செய்துள்ள இனப்படுகொலை வழக்கிலும் இந்தத் தீர்ப்பு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ரோஹிங்கியா மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கேட்டு மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்ததைப் போன்று, பலஸ்தீன மக்களும் ஒருநாள் இதேபோன்ற நீதியைப் பெற முடியுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
எனினும், இந்தத் தீர்ப்பு காஸா வழக்கின் முடிவைத் தீர்மானிக்காது. மாறாக, காஸா தொடர்பான வழக்கை மதிப்பிடுவதற்கான சட்டரீதியான அணுகுமுறையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பலஸ்தீன அரசியல் ஆய்வாளர் அஹ்மத் நஜார் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிரான தென்னாபிரிக்காவின் வழக்கு என்ன?
2023 ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் காஸா மீது போரை ஆரம்பித்தது.
இந்தப் போர் ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்களின் பின்னர், 2023 டிசம்பர் 29ஆம் திகதி தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தது.
காஸாவில் வாழும் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், இனப்படுகொலை தொடர்பான 1948ஆம் ஆண்டு சர்வதேச உடன்படிக்கையை மீறியுள்ளதாகவும் தென்னாபிரிக்கா குற்றஞ்சாட்டியது.
இதனுடன், பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவசர இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறும் தென்னாபிரிக்கா கோரியது.
2024 ஜனவரியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற விசாரணைகளின் பின்னர், காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலைக்குச் சமமாக அமையக்கூடிய சாத்தியம் இருப்பதாக சர்வதேச நீதிமன்றம் தெரிவித்தது.
இதனடிப்படையில், இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இஸ்ரேலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இஸ்ரேல் தற்காப்பு நடவடிக்கையாகவே போரை முன்னெடுப்பதாகவும், 2023 ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலளிப்பதாகவும் வாதிட்டது. அந்தத் தாக்குதல்களில் சுமார் 1,200 பேர் உயிரிழந்திருந்தனர்.
எனினும், 2024 மார்ச் மாதத்தில் காஸாவில் உணவுப் பற்றாக்குறை மற்றும் பட்டினி நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, உணவுப் பொருட்கள் அப்பகுதிக்குள் சென்றடைவதை உறுதிப்படுத்துமாறு இஸ்ரேலுக்கு நீதிமன்றம் மேலதிக உத்தரவைப் பிறப்பித்தது.
அதே ஆண்டு மே மாதத்தில், தெற்கு காஸாவின் ரஃபா பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தரைவழி இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும், இந்த உத்தரவுகள் எதனையும் இஸ்ரேல் நடைமுறைப்படுத்தவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
2024 ஜனவரி விசாரணைகளின்போது காஸாவில் சுமார் 23,000 பேர் உயிரிழந்திருந்தனர். அவர்களில் 10,000 பேர் சிறுவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 75,000 ஆக அதிகரித்துள்ளதாகவும், அவர்களில் சுமார் 21,000 பேர் சிறுவர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படும் ஆயிரக்கணக்கானோர் இந்த எண்ணிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.
2025 ஒக்டோபரில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பின்னரும் குறைந்தது 1,662 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டதா என்பது தொடர்பான இறுதித் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். இரு தரப்பினரும் எழுத்துமூலமான வாதங்களையும் பதில் வாதங்களையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், தென்னாபிரிக்காவின் அடுத்த சமர்ப்பிப்பு 2027 நவம்பரில் எதிர்பார்க்கப்படுகிறது.
மியன்மாருக்கு எதிரான வழக்கும் காஸா வழக்கும்: சட்டரீதியான ஒற்றுமைகள்
ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பாக 2019 நவம்பரில் காம்பியா, மியன்மாருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.
அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ரோஹிங்கியா சுதந்திரத்திற்காகப் போராடிய அரக்கான் ரோஹிங்கியா விடுதலை இராணுவம், பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி, மியன்மார் இராணுவம் ரோஹிங்கியா மக்கள் வாழும் பகுதிகளில் ‘கிளியரன்ஸ் ஒப்பரேஷன்’ எனப்படும் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது.
பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை, கிராமங்கள் அழிக்கப்பட்டமை, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் செய்மதிப் படங்கள் வெளியாகியிருந்த போதிலும், மியன்மார் அரசு பொதுமக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்தது.
ஆனால், சர்வதேச நீதிமன்றத்தின் 15 நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒன்பது நீதிபதிகள், மியன்மாரில் இடம்பெற்ற பரவலான அட்டூழியங்களுக்கான சாட்சியங்களின் அடிப்படையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என்பதே ஒரே நியாயமான முடிவு எனத் தெரிவித்துள்ளனர்.
மியன்மார் பாதுகாப்புப் படையினர் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா பொதுமக்களைக் கொலை செய்ததுடன், பரவலான பாலியல் வன்முறைகளிலும் சிறுவர்களுக்கு எதிரான கொடூரமான வன்முறைகளிலும் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ரோஹிங்கியா மக்களை இலக்கு வைப்பதற்காகப் பொதுமக்கள் ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்துவதற்கு மியன்மார் அனுமதித்ததாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவத் தளபதிகளுக்கு எதிராக உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இனப்படுகொலை நோக்கத்துடன் செயற்பட்டதுடன், அந்தச் சமூகத்தின் இனப்பெருக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் யுஜி இவாசாவா, மியன்மார் பாதுகாப்புப் படையினர் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா பொதுமக்களைக் கொலை செய்ததுடன், பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான கடுமையான வன்முறைகளிலும் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பங்களாதேஷை நோக்கித் தப்பிச் சென்ற ரோஹிங்கியா மக்களும் தாக்கப்பட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதற்காக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குதல், சேதமடைந்த சொத்துக்களை மீளமைத்தல், காணாமல்போனவர்களின் நிலைமையைத் தெளிவுபடுத்துதல், குடும்பங்களை மீண்டும் இணைத்தல், உயிரிழந்தவர்களுக்கு உரிய மரியாதையுடன் இறுதிக்கிரியைகளை மேற்கொள்ளுதல் மற்றும் மருத்துவ, உளவியல் சிகிச்சைகளை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மியன்மார் முன்னெடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு காஸா வழக்கில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்ன?

ரோஹிங்கியா வழக்கில் வெளிப்படையான எழுத்துப்பூர்வ இராணுவ உத்தரவுகள் மட்டுமன்றி, பல்வேறு சாட்சியங்கள் மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் அடிப்படையிலும் இனப்படுகொலை நோக்கத்தை நிரூபிக்க முடியும் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இது காஸா வழக்கில் தென்னாபிரிக்காவுக்கு முக்கியமான சட்டரீதியான வழிகாட்டியாக அமையக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மியன்மார் வழக்கைப் போன்று இஸ்ரேலும் தனது நடவடிக்கைகளைத் தற்காப்பு நடவடிக்கையாகவே நியாயப்படுத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பையே இலக்குவைப்பதாக இஸ்ரேல் கூறுகின்ற போதிலும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் சிறுவர்களுமாவர்.
இனப்படுகொலை செய்வதற்கான நோக்கத்தைத் தனித்தனியான சம்பவங்களின் அடிப்படையில் மாத்திரமன்றி, ஒட்டுமொத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியான போக்கின் அடிப்படையிலும் மதிப்பிட முடியும் என்பதை மியன்மார் வழக்கில் நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளதாக அஹ்மத் நஜார் தெரிவித்துள்ளார்.
காஸா தொடர்பான சாட்சியங்களை நீதிமன்றம் தனித்துவமாக மதிப்பிட வேண்டியிருந்தாலும், இந்தத் தீர்ப்பு தென்னாபிரிக்காவுக்கு தெளிவான சட்டரீதியான வழிகாட்டியை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட CAGE International அமைப்பின் அனஸ் முஸ்தபா தெரிவிக்கையில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஒரு அரசாங்கம் குறிப்பிட்ட சமூகத்தை அழிக்க முடியுமா என்பதே மியன்மார் வழக்கின் முக்கியமான கேள்வியாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நீதிமன்றம் ஏன் இனப்படுகொலை வழக்குகளில் அரிதாகவே தீர்ப்பளிக்கிறது?
இனப்படுகொலைக் குற்றத்தை, குறிப்பாக அதற்கான நோக்கத்தை நிரூபிப்பது போர்க்குற்றங்கள் அல்லது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை நிரூபிப்பதைவிடக் கடினமானதாகும்.
1948ஆம் ஆண்டு இனப்படுகொலைத் தடுப்பு மற்றும் தண்டனை தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின்படி, தேசிய, இன, மத அல்லது குறிப்பிட்ட இனக்குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இனப்படுகொலையாக வரையறுக்கப்படுகின்றன.
ஒரு சமூகத்தின் உறுப்பினர்களைக் கொலை செய்தல், அவர்களுக்கு கடுமையான உடல் அல்லது உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்துதல், அந்தச் சமூகத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் வாழ்க்கை நிலைமைகளை உருவாக்குதல், குழந்தைப் பிறப்பைத் தடுத்தல் மற்றும் குழந்தைகளை வேறு சமூகங்களுக்கு வலுக்கட்டாயமாக மாற்றுதல் ஆகிய ஐந்து நடவடிக்கைகளும் இனப்படுகொலைக் குற்றத்தின் கீழ் உள்ளடக்கப்படுகின்றன.
மியன்மார் வழக்கில் இவற்றில் நான்கு வகையான குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச நீதிமன்றம் தனிநபர்களுக்கு எதிராக அல்லாது நாடுகளுக்கு இடையிலான வழக்குகளையே விசாரிக்கிறது. எனவே, ஒரு சில தனிநபர்களின் நடவடிக்கைகளை மாத்திரம் நிரூபிப்பது போதுமானதல்ல. சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் இனப்படுகொலை நோக்கத்தையும் நிரூபிக்க வேண்டியுள்ளது.
2007ஆம் ஆண்டு செர்பியாவுக்கு எதிராக இடம்பெற்ற வழக்கில், போஸ்னியாவின் ஸ்ரெப்ரெனிகா பகுதியில் போஸ்னிய செர்பியப் படைகளால் இனப்படுகொலை இடம்பெற்றிருந்தாலும், செர்பியா நேரடியாக இனப்படுகொலை செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை. மாறாக, அந்த இனப்படுகொலையைத் தடுக்கவும் தண்டிக்கவும் தவறியதற்காக செர்பியா பொறுப்பேற்க வேண்டும் எனத் தீர்மானித்தது.
எனினும், தற்போதைய சர்வதேச நீதிமன்றம் இனப்படுகொலை தொடர்பான சட்ட அணுகுமுறையில் நெகிழ்வுத்தன்மையைக் காட்டி வருவதாக பிரித்தானியாவின் லிவர்பூல் ஜோன் மூர்ஸ் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் ட்ரியெஸ்டினோ மரினியெல்லோ தெரிவித்துள்ளார்.
சூழ்நிலைகள் வெவ்வேறானவையாக இருந்தாலும், பரவலான மற்றும் திட்டமிட்ட மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் காஸா நிலைமையிலும் இந்தச் சட்ட அணுகுமுறை பொருந்தக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் தாக்கம் ஏற்படுமா?
மியன்மார் வழக்கின் தீர்ப்பு, இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் அல்லது அவற்றுக்குத் துணைபோகும் நாடுகளின் பொறுப்புகள் தொடர்பான விவாதங்களையும் தீவிரப்படுத்தக்கூடும்.
இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா, ரோஹிங்கியா வழக்கின் தீர்ப்பை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்திருந்தது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கைது உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, அந்த நீதிமன்றத்துக்கும் அதன் நீதிபதிகளுக்கும் எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
மியன்மார் தொடர்பான தீர்ப்புக்குப் பின்னர் சர்வதேச நீதிமன்றத்தையும் அமெரிக்கா இலக்குவைக்கக்கூடும் என்ற அச்சமும் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர்களாக இல்லாவிட்டாலும், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களாக இருப்பதால் சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நாடுகளாக உள்ளன.
மியன்மார் வழக்கின் தீர்ப்புக்கு முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் மைக் வோல்ட்ஸ், தென்னாபிரிக்க சட்டத்தரணியும் நோபல் அமைதிப் பரிசு பெற்றவருமான நவி பிள்ளை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
நவி பிள்ளை, இனப்படுகொலையை நிரூபிப்பதற்கான சட்ட வரம்பைக் குறைப்பதற்கு முயற்சிப்பதாகவும், எதிர்காலத்தில் அமெரிக்க மற்றும் அதன் கூட்டணிப் படையினருக்கு எதிராக இந்த அணுகுமுறை பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், காஸாவில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுக்கள் மற்றும் சர்வதேச இனப்படுகொலை ஆய்வாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.
ஐரோப்பாவில் இஸ்ரேலின் முக்கிய கூட்டாளியான ஜேர்மனி, மியன்மாருக்கு எதிராக காம்பியா தாக்கல் செய்த வழக்கில் பல நாடுகளுடன் இணைந்து ஆதரவு தெரிவித்திருந்தது. கொலைகள் மட்டுமன்றி சிறுவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் கட்டாய இடப்பெயர்வுகள் உள்ளிட்டவற்றையும் நீதிமன்றம் ஆராய வேண்டும் என அந்த நாடுகள் வலியுறுத்தியிருந்தன.
இதேவேளை, இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவதன் மூலம் இனப்படுகொலைத் தடுப்பு உடன்படிக்கை மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழான தனது கடமைகளை ஜேர்மனி மீறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி 2024 மார்ச் மாதம் நிக்கரகுவா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. அந்த வழக்கின் விசாரணைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
ரோஹிங்கியா இனப்படுகொலை வழக்கின் தீர்ப்பு காஸா தொடர்பான வழக்கின் இறுதி முடிவைத் தீர்மானிக்காது. எனினும், இனப்படுகொலை நோக்கத்தை நிரூபிப்பதற்கான சட்டரீதியான அணுகுமுறையில் அது ஏற்படுத்தியுள்ள தாக்கம், பலஸ்தீன மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான சர்வதேச சட்டப் போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக்கூடும்.









