வாரக்கணக்கில் நீடித்த தொழிலாளர் போராட்டங்களைத் தொடர்ந்து, பங்களாதேஷில் ஆடைத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியத்தை 36 சதவீதத்தால் அதிகரித்து 17,000 டாக்காவாக (சுமார் 139 அமெரிக்க டொலர்) நிர்ணயிக்க அந்நாட்டு அரசின் சம்பள சபை தீர்மானித்துள்ளது.
எனினும், 2023ஆம் ஆண்டில் 56 சதவீதம், 2018ஆம் ஆண்டில் 51 சதவீதம் மற்றும் 2013ஆம் ஆண்டில் 77 சதவீதம் என அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த பத்து ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட மிகக் குறைந்த ஊதிய உயர்வு இதுவாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் 32,000 டாக்கா மாத ஊதியம் கோரிய தொழிலாளர்கள், பின்னர் அதனை 18,000 டாக்காவாகக் குறைத்தனர். இந்நிலையில், சுமார் 12 மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர், ஆறு பேர் கொண்ட குழு 4-2 என்ற வாக்கு அடிப்படையில் 17,000 டாக்கா ஊதியத்தை அங்கீகரித்துள்ளது.
புதிய ஊதியக் கட்டமைப்பின்படி, நான்காம் நிலைத் தொழிலாளர்களுக்கு 17,000 டாக்காவும், முதலாம் நிலைத் தொழிலாளர்களுக்கு 21,500 டாக்காவும் மாதச் சம்பளமாக வழங்கப்படவுள்ளது.
எனினும், ஒப்பீட்டளவில் குறைவான இந்த ஊதிய உயர்வு, ஆடைத் தொழில்துறையின் உற்பத்தியைப் பாதித்துவரும் தொழிலாளர் அமைதியின்மையைத் தணிக்கப் போதுமானதாக இருக்காது எனக் கருதப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை 397 தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும், மேலும் 84 தொழிற்சாலைகள் தொழிலாளர் சட்டத்தின் ‘வேலை இல்லை, ஊதியம் இல்லை’ என்ற விதியின் கீழ் மூடப்பட்டிருந்ததாகவும் பங்களாதேஷ் ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (BGMEA) தெரிவித்துள்ளது.
18 நாட்கள் நீடித்த இந்தப் போராட்டங்களின்போது, 317 தொழிற்சாலைகள் சுமார் 428 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உற்பத்தியை இழந்துள்ளன. அத்துடன், கொள்வனவு நிறுவனங்கள் சுமார் 254 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முன்பதிவுகளை வேறு நாடுகளுக்கு மாற்றியுள்ளதாகவும் BGMEA நடத்திய ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஊதியத்தை அதிகரிப்பது உற்பத்திச் செலவுகளை உயர்த்தி, சர்வதேச சந்தையில் போட்டித்தன்மையைப் பலவீனப்படுத்தும் என தொழிற்சாலை உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அதேவேளை, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாப்பதற்கும் ஆடைத் தொழில்துறையின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் அதிக ஊதியம் அவசியம் என தொழிலாளர் உரிமைக் குழுக்கள் வலியுறுத்துகின்றன.
புதிய ஊதியக் கட்டமைப்பு எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், தொழிலாளர்கள் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட ஊதியத்தைப் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.







