எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, குளிரூட்டப்பட்ட மீன் மற்றும் இறைச்சி வகைகளைக் கொள்வனவு செய்யும்போது விசேட கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதியிடப்பட்ட உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது அவற்றின் காலாவதித் திகதி மற்றும் உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவு விற்பனை நிலையங்களைப் பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகளைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் முன்னெடுக்கவுள்ளதாகவும் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.








