மியன்மார் ரோஹிங்கிய அகதிகளின் பாதுகாப்பு மற்றும் பலஸ்தீன விவகாரம் குறித்தும் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபம்
கொவிட்-19 காலப்பகுதியில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்டபோது இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் நடந்துகொள்ளும் விதம் கீழ்த்தரமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மியன்மாரில் இருந்து தப்பி இலங்கைக்கு வந்துள்ள ரோஹிங்கிய அகதிகளுக்கு சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை (23) நடைபெற்ற வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய ரவூப் ஹக்கீம்,
வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய மூன்று முக்கிய பொறுப்புகளையும் அமைச்சர் விஜித ஹேரத் கையாள்வது சவாலான விடயமாகும். எனவே, இந்த அமைச்சின் பணிகளைச் சிறப்பாக முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு அமைச்சுச் செயலாளர்களையாவது நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கிறேன்.
மியன்மார் அரசாங்கத்தின் வன்முறைகளில் இருந்து தப்பி சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த ரோஹிங்கிய அகதிகளில் பெரும்பாலானோர் இன்னமும் முல்லைத்தீவு விமானப்படைத் தள வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குச் சர்வதேசப் பாதுகாப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் மனித உரிமைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இவர்களை மீண்டும் மியன்மாருக்கு அனுப்புவது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு திருப்பி அனுப்புவது, சர்வதேச சட்டத்தின் கீழ் காணப்படும் ‘நொன்-ரிஃபௌல்மென்ட்’ (Non-refoulement) எனப்படும் கட்டாயத் திருப்பி அனுப்பாமை கோட்பாட்டை மீறும் செயலாகும்.
மியன்மார் ரோஹிங்கிய மக்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாக சர்வதேச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வழக்கின் பின்னணியில், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது சர்வதேச சமூகத்தின் பொறுப்பாகும்.
எனவே, ரோஹிங்கிய அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு அனுப்புவதற்கான முயற்சிகளைக் கைவிட்டு, அவர்களுக்கு அகதி அந்தஸ்து மற்றும் உரிய உரிமைகளை வழங்க வேண்டும்.
மேலும், முல்லைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளைச் சந்திப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்திற்கு (UNHCR) அனுமதி வழங்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை, பலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேலின் தாக்குதல்களும் அட்டூழியங்களும் தொடர்கின்றன. காஸா மற்றும் மேற்குக் கரையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெறுமனே அறிக்கைகளை வெளியிடுவதுடன் நின்றுவிடக் கூடாது.
இஸ்ரேலின் நடவடிக்கைகளை வெளிப்படையாகக் கண்டிப்பதுடன், சர்வதேச அரங்கில் அதற்கு எதிராகத் தைரியமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இஸ்ரேல் கத்தார் மீது தாக்குதல் நடத்தியபோது, அதன் பெயரைக் குறிப்பிடாமல் இரு தரப்பினரும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என இலங்கை வெளியிட்ட அறிக்கை பலவீனமான வெளியுறவுக் கொள்கையையே வெளிப்படுத்துகிறது.
இதேவேளை, முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்பான விவகாரத்திலும் இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறை கவலையளிக்கிறது.
பாகிஸ்தானுக்கு எதிராகச் செயற்படுவதற்கு இடமளிக்க முடியாது எனக் கூறி, இம்ரான் கானின் நிலைமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் கவலையை வெளிப்படுத்தும் தீர்மானத்தை நிராகரித்தமை ஏற்றுக்கொள்ள முடியாதது.
பாகிஸ்தான் இலங்கையின் நெருங்கிய நட்பு நாடாகும். நாட்டின் கடினமான காலங்களிலும் மகிழ்ச்சியான தருணங்களிலும் பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளது. எனவே, உண்மையான நட்பின் அடையாளமாக, தவறுகள் இடம்பெறும்போது அவற்றைச் சுட்டிக்காட்டுவதற்கும் நாம் தயங்கக்கூடாது.
கொவிட்-19 காலப்பகுதியில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்டபோது, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.
அந்தக் காலப்பகுதியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, இலங்கை அரசாங்கத்துடன் பேசி, ஜனாஸா எரிப்புக் கொள்கையில் மாற்றம் ஏற்படுவதற்கு அவர் உதவினார்.
அவரது இந்தப் பங்களிப்பை நாம் மறந்துவிட முடியாது. எனவே, தற்போது அவர் எதிர்கொண்டுள்ள நிலைமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கவலையை வெளிப்படுத்துவதற்குக் கூட அஞ்சுவது ஏன்?
ஒரு நாட்டின் உண்மையான நட்பு என்பது அதன் அரசாங்கத்தைப் பாதுகாப்பதில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை. தவறுகள் இடம்பெறும்போது அவற்றைச் சுட்டிக்காட்டுவதும் நட்பின் முக்கியமான அடையாளமாகும்.
இலங்கை ஒரு சிறிய நாடு என்பதற்காக சர்வதேச விவகாரங்களில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தத் தயங்கக்கூடாது. அரசாங்கத்தின் தற்போதைய வெளியுறவுக் கொள்கை பரிவர்த்தனை அடிப்படையிலானதாகவே காணப்படுகிறது. இந்த அணுகுமுறை மாற்றப்பட வேண்டும்.
மேலும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் பிள்ளைகள் இலங்கையின் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கைப் பிரஜைகளாகவும் இலங்கை கடவுச்சீட்டைக் கொண்டவர்களாகவும் இருந்தபோதிலும், வெளிநாடுகளில் வசிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் பல்கலைக்கழக அனுமதிக்காக வெளிநாட்டவர்களாகக் கருதப்பட்டு அதிக கட்டணங்களைச் செலுத்த வேண்டிய நிலைமை காணப்படுகிறது.
எனவே, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கும் சலுகைக் கட்டணத்தில் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.








