கூரை மீது சூரிய மின்சக்திப் படலங்களைப் பொருத்தும் திட்டத்தை முடக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக, அடுத்த ஆண்டு முதல் நாட்டில் மின்வெட்டு ஏற்படக்கூடும் என எரிசக்தித் திட்டமிடலாளர் அசோக அபேகுணவர்தன எச்சரித்துள்ளார்.
சூரிய மின்சக்தி தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தற்போது காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய நடைமுறையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சூரிய மின்சக்தி தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றை அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். எனினும், அதற்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை.
மின்சார சபை எதிர்பார்த்ததை விடவும் அதிக வேகத்தில் கூரை மீது சூரிய மின்சக்திப் படலங்கள் பொருத்தப்படுவதே இதற்கான காரணமாக அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூரிய மின்சக்திப் படலங்கள் ஊடாகப் பகல் வேளையில் அதிகளவிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், பகலில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமித்து வைத்து இரவில் பயன்படுத்துவதற்கான போதிய வசதிகள் மின்சார சபையிடம் இல்லை.
2030ஆம் ஆண்டளவில் இந்த மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டமைப்பை மின்சார சபை தயார்படுத்தாத பட்சத்தில், மின்கட்டமைப்பு அடிக்கடி செயலிழக்கும் அபாயம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்தக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு, கூரை மீதான சூரிய மின்சக்தித் திட்டத்தை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இந்தத் திட்டம் பாதிக்கப்பட்டால், அடுத்த ஆண்டு முதல் எதிர்வரும் காலங்களில் குறிப்பாக வறட்சியான பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கட்டாயமாக மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
மாற்றாக, அதிக செலவுமிக்க எரிபொருள் மின்நிலையங்கள் ஊடாக அதிகளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும். இது நாட்டிற்கும் மின்சார சபைக்கும் பொருளாதார ரீதியில் சாதகமானதாக அமையாது என்பதுடன், நுகர்வோரின் மின்சாரக் கட்டணங்களும் சடுதியாக அதிகரிக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களிடமிருந்து தொடர்ந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதுடன், மின்சாரத்தைச் சேமிப்பதற்கான பிரச்சினைக்கும் தீர்வு காண்பதே அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கையாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக அமைச்சரவைப் பத்திரத்தில் இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் ஒன்று ‘Zero Export’ முறையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறையின் கீழ், மின்சார சபைக்கு ஒரு அலகு மின்சாரத்தைக் கூட வழங்க முடியாது. இது பழைய ‘Net Metering’ முறையை ஒத்ததாக இருந்தாலும், கொள்வனவு செய்யப்படும் மற்றும் உற்பத்தி செய்யப்படும் மின்சார அலகுகள் ஒன்றுக்கொன்று ஈடுசெய்யப்பட மாட்டாது.
இதனால், முன்னர் மின்சார சபையை மின்சாரச் சேமிப்பகமாகப் பயன்படுத்திய வசதி இல்லாமல் போகும். எனவே, கூரை மீது சூரிய மின்சக்திப் படலங்களைப் பொருத்துவதுடன், மேலதிகமாக மின்கலங்களையும் (Battery) கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என அசோக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.







