மாவீரர் வாரத்தை முன்னிட்டு, உயிரிழந்த 28,341 விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுப் பலகைகள் யாழ்ப்பாணம் நல்லூரில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
தியாகி திலீபன் நினைவிடத்திற்கு அருகில் கடந்த நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தக் கண்காட்சியில், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நினைவுப் பலகைகளில் இரு சிங்களவர்களின் பெயர்களும் தனியான பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வருடாந்தம் நவம்பர் 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் மாவீரர் நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இலங்கையில் தனியான தமிழீழ அரசை உருவாக்கும் நோக்கில் போராடி வந்த விடுதலைப் புலிகள் அமைப்பு, 2009ஆம் ஆண்டு இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டது. குறித்த அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகத் தொடர்கிறது.
உயிரிழந்த தமது உறவினர்களை நினைவுகூருவதற்கு அனுமதி உண்டு என அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்துள்ளதுடன், தடைசெய்யப்பட்ட அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.









