அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வாப் பிரிவின் ஏற்பாட்டில், பைத்துஸ் ஸகாத் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான விசேட ஆலோசனைக் கூட்டம் கடந்த நவம்பர் 21ஆம் திகதி கொழும்பு, புதுக்கடை மீரானிய்யா ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
2027 ஜனவரி மாதம் பைத்துஸ் ஸகாத் நிறுவனங்களுக்காக நடத்தப்படவுள்ள மாநாட்டின் முன்னேற்பாடாக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பைத்துஸ் ஸகாத் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மார்க்க ரீதியான, நிதி முகாமைத்துவ, நிர்வாக மற்றும் கணக்காய்வு தொடர்பான சவால்களை அடையாளம் காண்பதுடன், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வது இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.
நிகழ்வின் ஆரம்ப உரையை நிகழ்த்திய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் அர்கம் நூராமித், சமூகத்தில் பைத்துஸ் ஸகாத் நிறுவனங்கள் ஆற்றிவரும் பணிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
அத்துடன், மார்க்க ரீதியான விடயங்களுக்கு அப்பால் நிதி முகாமைத்துவம், முறையான கணக்குப் பராமரிப்பு மற்றும் நிர்வாக ஒழுங்குகள் ஆகியவற்றிலும் இந்நிறுவனங்கள் உரிய கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, ஃபத்வாக் குழுவின் மார்க்கக் கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வுக் குழுவின் பொறுப்பாளர் முஃப்தி கே.எச்.எம்.ஏ. மபாஸ், ஆலோசனைக் கூட்டத்தின் நோக்கங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.
இதனையடுத்து, கலந்துகொண்ட பைத்துஸ் ஸகாத் நிறுவனங்களின் பிரதிநிதிகள் எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, குழுக் கலந்துரையாடல் மற்றும் செயலமர்வு நடத்தப்பட்டது.
இதன்போது ஒவ்வொரு குழுவுக்கும் கேள்விப் படிவங்கள் வழங்கப்பட்டு, தமது நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பான ஆலோசனைகளைத் தொகுத்து முன்வைப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து உரையாற்றிய ஃபத்வாக் குழுவின் உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். யஹ்யா, ஸகாத் நிதியைச் சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் உரிய பயனாளிகளுக்கு விநியோகித்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் ஷரீஆ சட்டதிட்டங்களையும் வரையறைகளையும் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தைத் தெளிவுபடுத்தினார்.
அதேவேளை, ஃபத்வாக் குழுவின் உப செயலாளர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எம்.ரீ.எம். ஸல்மான், ஸகாத் தொடர்பான விடயங்களில் ஷரீஆ விதித்துள்ள சட்டதிட்டங்களை உறுதியாகப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேலும், மார்க்கம் நெகிழ்வுத்தன்மையை வழங்கியுள்ள விடயங்களில் அதனைப் பயன்படுத்தி சமநிலையான அணுகுமுறையுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் வழிகாட்டினார்.
நிகழ்வின் இறுதியில் விசேட உரையாற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பைத்துஸ் ஸகாத் நிறுவனங்களை மேலும் வலுவூட்டுவதுடன், அவற்றின் செயற்பாடுகளைத் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
குறிப்பாக, வக்ஃப், ஸதகா, ஹதிய்யா மற்றும் நேர்ச்சை போன்ற வழிமுறைகளையும் பயன்படுத்தி மக்களைப் பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பைத்துஸ் ஸகாத் நிறுவனங்களின் நிர்வாக மற்றும் ஏனைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக, அந்தந்த ஊர் மக்களின் பங்களிப்புடன் தனியான வக்ஃப் அல்லது தர்ம நிதி ஏற்பாடுகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
மேலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுந் நபவியில் பைத்துஸ் ஸகாத் திட்டத்தை நிறுவி நடைமுறைப்படுத்தியதைப் போன்று, இலங்கையிலுள்ள 3,000 மஸ்ஜிதுகளிலும் இத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதன்போது, பைத்துஸ் ஸகாத் நிறுவனங்களை நிறுவுவதற்கும் அவற்றின் செயற்பாடுகளை வலுவூட்டுவதற்கும் ஜம்இய்யாவினால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளையும் அவர் நினைவுகூர்ந்தார்.
அத்துடன், இம்முயற்சிகளில் முக்கிய பங்காற்றிய அஷ்-ஷைக் ரூமி, தமது அனுபவங்களையும் கடந்தகாலச் செயற்பாடுகளையும் நிகழ்வில் பகிர்ந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, நுவரெலியா, கேகாலை, குருநாகல், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, பதுளை, பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் புத்தளம் ஆகிய 16 மாவட்டங்களைச் சேர்ந்த 32 பைத்துஸ் ஸகாத் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 72 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பங்கேற்று பெறுமதியான கருத்துகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துகொண்ட அனைத்து நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், நிகழ்வைத் தொகுத்து வழங்கிய அஷ்-ஷைக் ஹைதர் அலிக்கும், இடவசதி மற்றும் ஏனைய ஒத்துழைப்புகளை வழங்கிய கொழும்பு, புதுக்கடை மீரானியா ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தினருக்கும் ஜம்இய்யா நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
மேலும், ஃபத்வாப் பிரிவின் பணியாளர்களான அஷ்-ஷைக் ஏ.எம்.எம். மபாஹிம், அஷ்-ஷைக் ஹாரூன், அஷ்-ஷைக் முஹம்மத் ஸகீர், அஷ்-ஷைக் ஹலீமுல்லாஹ் மற்றும் அஷ்-ஷைக் முஹம்மத் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.





