பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கைக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் 82 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களைக் குவித்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் மாஸ் சாதகத் 96 ஓட்டங்களையும், அணித் தலைவர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 73 ஓட்டங்களையும் அதிரடியாகப் பெற்றனர். இலங்கை அணியின் களத்தடுப்புத் தவறுகளைச் சாதகமாகப் பயன்படுத்திய இருவரும், அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி பெற்ற இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். 2021ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஆறு விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றதே பாகிஸ்தான் அணியின் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.
இலங்கையின் களத்தடுப்புத் தவறுகள்!
போட்டியின் ஆரம்ப ஓவர்களில் இலங்கை அணியின் களத்தடுப்பில் ஏற்பட்ட தவறுகள், பாகிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்தன.
பினுர பெர்னாண்டோவின் இரண்டாவது ஓவரில் சாஹிப்சாதா ஃபர்ஹானுக்கு கிடைத்த பிடியெடுப்பு வாய்ப்பை மஹீஷ் தீக்ஷண தவறவிட்டார். பின்னர், 11 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஃபர்ஹானின் மற்றுமொரு பிடியெடுப்பு வாய்ப்பையும் சினெத் ஜயவர்தன தவறவிட்டார்.
இந்த வாய்ப்புகளைச் சாதகமாகப் பயன்படுத்திய ஃபர்ஹான், ஐந்து சிக்ஸர்கள் மற்றும் நான்கு பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களைப் பெற்றார். அவர் தசுன் ஷானக்கவின் பந்துவீச்சில் 15ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம், 44 ஓட்டங்களைப் பெற்றிருந்த மாஸ் சாதகத்தின் பிடியெடுப்பு வாய்ப்பை நுவன் துஷார தவறவிட்டார். இதனைத் தொடர்ந்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய சாதகத், 51 பந்துகளில் ஏழு சிக்ஸர்கள் மற்றும் ஆறு பௌண்டரிகள் அடங்கலாக 96 ஓட்டங்களைக் குவித்தார்.
எஷான் மலிங்கவின் பந்துவீச்சில் இன்னிங்ஸின் இறுதிப் பந்தில் ஆட்டமிழந்ததால், சாதகத்தால் சதத்தைப் பூர்த்தி செய்ய முடியவில்லை.
முகமது இம்ரானின் பந்துவீச்சில் சரிந்த இலங்கை!
216 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.
தனது இரண்டாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் விளையாடிய பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் முகமது இம்ரான், அபாரமாகப் பந்துவீசி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவர் நான்கு ஓவர்கள் பந்துவீசி 11 ஓட்டங்களை மாத்திரமே வழங்கினார்.
சினெத் ஜயவர்தன 22 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் குசல் மெண்டிஸ் ஒன்பது ஓட்டங்களுடனும், சஹான் ஆராச்சிகே ஓட்டமின்றியும் ஆட்டமிழந்தனர்.
இதனால், எட்டாவது ஓவரில் 49 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி நெருக்கடிக்குள்ளானது. அதன் பின்னர் அணியால் மீண்டெழ முடியவில்லை.
இறுதியில், 20 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 133 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் மஹீஷ் தீக்ஷண ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும், சமிந்து விக்கிரமசிங்க 29 ஓட்டங்களையும் பெற்றனர்.
தொடர்ச்சியான தோல்விகளால் நெருக்கடியில் இலங்கை!
இந்தத் தோல்வியின் மூலம், வெளிநாட்டு மண்ணில் இலங்கை அணி தொடர்ச்சியாக மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேசத் தொடரை இழந்துள்ளது.
இதற்கு முன்னர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை 2–1 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 3–0 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரையும் இழந்துள்ளமை இலங்கை அணியின் துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு தொடர்பான கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.
போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்த இலங்கை அணித் தலைவர் குசல் மெண்டிஸ், துடுப்பாட்ட வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.
துடுப்பாட்டத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் குறைந்தபட்சம் 200 ஓட்டங்களையாவது பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். அண்மைய போட்டிகளில் களத்தடுப்பில் எதிர்பார்த்த அளவிலான திறனை வெளிப்படுத்த முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள ஒருநாள் சர்வதேச முத்தரப்புத் தொடரில் இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுடன் இணைந்துகொள்ளவுள்ளது.







