ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஜ்மான் நகரில் இன்று (25) நடைபெற்ற ஐசிசி மகளிர் வளர்ந்து வரும் நாடுகளுக்கான கிண்ணத் தொடரின் (ICC Women’s Emerging Nations Trophy) இறுதிப் போட்டியில், அயர்லாந்து மகளிர் அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அஜ்மான் கார்வான் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து மகளிர் அணி, இலங்கைப் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அயர்லாந்து அணி சார்பில் அலானா டால்செல் அதிகபட்சமாக 25 ஓட்டங்களையும், லூயிஸ் லிட்டில் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணி சார்பில் அபாரமாகப் பந்துவீசிய சத்யா சந்தீபனி 4 ஓவர்களில் 13 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து, 97 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 12.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இலங்கை அணி சார்பில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய இமேஷா துலானி, 25 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு வலுச்சேர்த்தார்.
சஞ்சனா காவிந்தி 25 ஓட்டங்களையும், நிலக்ஷிகா சில்வா ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அயர்லாந்து அணி சார்பில் கியா மெக்கார்ட்னி மற்றும் காரா முரே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம், 44 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற ஹர்ஷிதா சமரவிக்ரம தலைமையிலான இலங்கை மகளிர் அணி, ஐசிசி மகளிர் வளர்ந்து வரும் நாடுகளுக்கான கிண்ணத்தைத் தனதாக்கிக்கொண்டது.








