முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (23) நிராகரித்துள்ளது.
ரூ.220 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை குற்றவியல் முறையில் முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பான குற்றச்சாட்டில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, அவரை எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது தனிப்பட்ட செயலாளராக பணியாற்றிய சுகீஸ்வர பண்டார, சிறப்புத் திட்டங்களின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியபோது ரூ.220 மில்லியனுக்கும் அதிகமான அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களின் ஊதிய முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் அடிப்படையில், கடந்த ஜூன் 18ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் (CCIB) அவர் கைது செய்யப்பட்டார்.
இரண்டு வெவ்வேறு அரச நிறுவனங்களிடமிருந்து ஒரே நேரத்தில் சம்பளம் பெற்றதாகவும் விசாரணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.








