அப்ரா அன்சார்
கொழும்பு
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் மீண்டும் அத்துமீறி நுழைந்து, அதன் முற்றத்தில் யூத மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூரை முன்னிட்டு, கடந்த வார இறுதியில் கிழக்கு ஜெருசலேமில் உள்ள புனிதத் தலங்களை இலக்காகக் கொண்ட தொடர் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த வியாழக்கிழமை (17), இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் உள்ளிட்டோர் அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைந்திருந்தனர்.
இதனிடையே, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சனிக்கிழமை கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரப் பகுதியில் உள்ள சுரங்கப் பாதைகளுக்குச் சென்றுள்ளார்.
அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்துக்கு அடியில் அமைந்துள்ள இந்தச் சுரங்கப் பாதைகள், அப்பகுதியின் பாலஸ்தீன மக்களிடையே மிகவும் உணர்வுபூர்வமான விவகாரமாகக் கருதப்படுகின்றன.
நெதன்யாகு, தனது அதிகாரப்பூர்வ Instagram பக்கத்தில், அல்-புராக் சுவர் என முஸ்லிம்களால் அழைக்கப்படும் மேற்கு சுவரில் நடைபெற்ற யூதர்களின் ‘Selichot’ பிரார்த்தனையில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையும் வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் நெதன்யாகு, அவரது மனைவி சாரா மற்றும் பல அரசாங்க அமைச்சர்கள் உள்ளிட்டோர் மேற்கு சுவர் பகுதிக்குச் சென்றுள்ளனர்.
ஒரு காணொளியில், மேற்கு சுவருக்கு அடியில் உள்ள அகழ்வாராய்ச்சி சுரங்கப் பாதை ஒன்றில் நெதன்யாகுவும் அவரது மனைவியும் காணப்படுகின்றனர்.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சுமார் 570 இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக பாலஸ்தீன ஜெருசலேம் ஆளுநரகம் தெரிவித்துள்ளது.
அவர்கள் யோம் கிப்பூரை முன்னிட்டு தால்மூத் சார்ந்த மதச் சடங்குகள் மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் அந்த ஆளுநரகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவங்களுக்கு ஹமாஸ் அமைப்பு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. அல்-அக்ஸா பள்ளிவாசலின் இஸ்லாமிய அடையாளத்தையும் அதன் மத முக்கியத்துவத்தையும் பாதிக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
அகழ்வாராய்ச்சிகள் தொடர்பில் சர்ச்சை
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேல் பல ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சிப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
இந்தப் பணிகள் குறித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட தரப்புகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
இரண்டாவது ஆலயத்தின் சுற்றுச்சுவரின் எச்சங்களுக்கான ஆதாரங்களைத் தேடுவதே இந்தப் பணிகளின் நோக்கம் எனக் கூறப்பட்டாலும், இதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, இந்த நடவடிக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் மீதான இஸ்ரேலின் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் முயற்சியாக இருப்பதாகவும் சில தரப்புகள் கருதுகின்றன.
அல்-அக்ஸா பள்ளிவாசல் தொடர்பான இத்தகைய நடவடிக்கைகள் மத ரீதியானதா அல்லது அரசியல் நோக்கங்களைக் கொண்டதா என்பது குறித்தும் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
மத்திய கிழக்கு மற்றும் அரபு-இஸ்ரேல் மோதல் தொடர்பான அரசியல் ஆய்வாளர் அஹ்மத் அல்-ஹிலா, யோம் கிப்பூர் மற்றும் எதிர்வரும் இஸ்ரேலிய தேர்தலை முன்னிட்டு நெதன்யாகு மத அடையாளங்களை அரசியல் ரீதியாக பயன்படுத்துவதாக அல்ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.
அவரது கருத்துப்படி, அல்-அக்ஸா மற்றும் ஜெருசலேம் தொடர்பான இஸ்ரேலிய வலதுசாரி மற்றும் மத அடையாளங்களை வலுப்படுத்துவதன் மூலம் அரசியல் ஆதரவை திரட்டுவதற்கான முயற்சியாக இந்த விஜயம் அமையக்கூடும்.
இதேவேளை, ஜெருசலேமின் எதிர்கால அந்தஸ்து தொடர்பில் இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய தரப்புகளுக்கு இடையே நீண்டகாலமாக முரண்பாடு நிலவி வருகிறது. கிழக்கு ஜெருசலேம் எதிர்கால பாலஸ்தீன அரசின் தலைநகராக இருக்க வேண்டும் என பாலஸ்தீன தரப்பு வலியுறுத்தி வருகிறது.
அல்-ஹிலாவின் கூற்றுப்படி, கிழக்கு ஜெருசலேமைச் சுற்றியுள்ள குடியேற்றத் திட்டங்களும், நகரத்தின் மீதான இஸ்ரேலிய இறையாண்மையை வலியுறுத்தும் நடவடிக்கைகளும், இவ்விவகாரத்தின் அரசியல் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளன.
(Al Jazeera)








