அப்ரா அன்சார்
கொழும்பு
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் முகாமையாளரான திஷா சாலியனின் மரணம் தொடர்பில் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்துள்ளது.
திஷா சாலியனின் மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு மும்பை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரபலங்களின் முகாமையாளராக பணியாற்றி வந்த திஷா சாலியன், 2020 ஜூன் 8ஆம் திகதி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அவரது மரணம் இடம்பெற்ற சில நாட்களுக்குப் பின்னர், சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.திஷா சாலியனின் மரணம் தொடர்பான வழக்கு ஆரம்பத்தில் விபத்து மரண அறிக்கையாக (ADR) பதிவு செய்யப்பட்டிருந்தது.
எனினும், திஷாவின் குடும்பத்தினர் அவர் கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்த நிலையில், ஏன் ADR மாத்திரம் பதிவு செய்யப்பட்டது என மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் பாரதி டாங்ரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னதாக கேள்வி எழுப்பியிருந்தது.
மேலும், திஷா சாலியனின் குடும்பத்தினருக்கு அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் ADR ஆகியவற்றின் பிரதிகள், அவர் உயிரிழந்து ஐந்து ஆண்டுகள் கடந்தும் வழங்கப்படவில்லை என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டிருந்தது.
திஷாவின் தந்தை சதீஷ் சாலியன், தனது மகளின் மரணத்திற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்களை விசாரணை அதிகாரிகளிடம் ஏற்கனவே வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், விசாரணை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் எனக் கருதும் பலரது பெயர்களையும் வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.
“எனது மகளுக்கு நடந்த அனைத்தையும் நான் உண்மையாகவே தெரிவித்தேன். ஆதித்யா, சூரஜ் பஞ்சோலி, டினோ மோரியா மற்றும் பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டேன். அவர்கள் அனைத்தையும் பதிவு செய்துகொண்டனர். நான் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகவும், சில நாட்களில் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்தனர்” என சதீஷ் சாலியன் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
“உண்மையை தோற்கடிக்க முடியாது. உண்மையின் பக்கம் இறைவன் இருப்பதால் நீதி கிடைக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திஷா சாலியனின் மரணம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தியும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளியில் அவர், “உண்மைக்கு தனக்கென ஒரு சக்தி உள்ளது. அதை சில காலம் அடக்கி வைக்கலாம், துன்புறுத்தலாம். ஆனால் அதை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
திஷா சாலியனின் மரணம் தொடர்பான சிபிஐ விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஆதரவாளர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(Times of India)







