அப்ரா அன்சார்
கொழும்பு
இலங்கை – கட்டார் கூட்டு தொழிலாளர் குழுவின் அண்மைய கூட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான தொழிலாளர் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தோஹாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஆட்சேர்ப்பு நடைமுறைகளை முறைப்படுத்துதல், வெளிப்படையான மற்றும் நெறிமுறையான பணியாளர் ஆட்சேர்ப்பை உறுதி செய்தல் மற்றும் கட்டாரில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
கட்டார் தொழிலாளர் அமைச்சின் துணைச் செயலாளர் ஷெய்கா நஜ்வா பின்த் அப்துல்ரஹ்மான் அல் தானி மற்றும் இலங்கையின் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண ஹேமச்சந்திர ஆகியோர் கூட்டத்துக்கு இணைத் தலைமை தாங்கியுள்ளனர்.
பயிற்சி பெற்ற மற்றும் தொழில்சார் தகுதிகளைக் கொண்ட இலங்கையர்களுக்கு கட்டாரில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், இரு நாடுகளிலும் தொழில்சார் தகுதிகளை பரஸ்பரம் அங்கீகரித்தல் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கட்டாரில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
மேலும், கூட்டு தொழிலாளர் குழுவின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான தொழிலாளர் ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை இருதரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் சித்தாரா கான், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் மேலதிக செயலாளர் சுகத் யாலேகம மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.எஸ்.டி. குணசிங்க உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இலங்கை – கட்டார் இராஜதந்திர உறவுகளின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற இந்தக் கூட்டம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நடைமுறை ரீதியான பலன்களாக மாற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல், திறன் மேம்பாடு, நியாயமான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.







