2027ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு, கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதி பற்றிய பாராளுமன்றக் குழு (COPF) உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனையடுத்து, குறித்த சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது வருவாய் முகாமைத்துவம், அரச செலவினங்கள் மற்றும் முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் தொடர்பான இறுதித் தீர்மானங்கள், ஒக்டோபர் 22ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டு, 2027ஆம் ஆண்டுக்கான அரச செலவின மதிப்பீடுகள், மூலதன ஒதுக்கீட்டு இலக்குகள், அரச வருவாய் எதிர்வுகூறல்கள் மற்றும் கடன் மீள்செலுத்தல் பொறுப்புகள் தொடர்பில் விரிவான விளக்கங்களை வழங்கினர்.
இதன்போது, 2027ஆம் ஆண்டுக்கான மூலதனச் செலவின ஒதுக்கீடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், நாடளாவிய ரீதியிலான வீதி அபிவிருத்தி, சுகாதார மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்துதல், தேசிய மின்சாரக் கட்டமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் நகர அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், பேரினப் பொருளாதார எதிர்வுகூறல்கள், பொது நிதி முகாமைத்துவக் கட்டமைப்புகள், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள், அத்தியாவசிய பொதுச் சேவைகளுக்கான செலவினங்கள் ஆகியவையும் குழுவினால் ஆராயப்பட்டன.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான (SMEs) நிதியுதவி உத்திகள், கடன் உத்தரவாதத் திட்டங்கள் மற்றும் வர்த்தகத் துறையை மேம்படுத்துவதற்கான பரந்தளவிலான ஆதரவு நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், 2027ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டுக் கடன் மீள்செலுத்தல் தேவைகள், எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு நிதி வரவுகள் மற்றும் பொதுக் கடன் முகாமைத்துவம் தொடர்பிலும் அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர்.
அரச வருவாய் இலக்குகள், வரி நிர்வாகத்தின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வரவு செலவுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியைப் பொறுப்புடன் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்கான உத்திகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்னே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, அஜித் அகலகட, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரக்கோன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும், சட்டத்தரணிகளான சித்ரல் பெர்னாண்டோ மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.








