பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆபாசப் படங்கள், காணொளிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட காணொளிகள் உள்ளிட்ட உள்ளடக்கங்கள் சமூக ஊடகங்களில் அதிகளவில் பரவி வருவதையடுத்து, அவ்வாறான முகநூல் குழுக்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்காக பொலிஸார் புதிய மின்னஞ்சல் முகவரியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆபாசப் படங்கள் அல்லது காணொளிகளைப் பகிர்வதன் மூலம் துன்புறுத்தல் அல்லது மன உளைச்சல் ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளை dir.cid@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு பொலிஸாரின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறான உள்ளடக்கங்களைப் பகிரும் முகநூல் குழுக்களை அடையாளம் கண்டு அவற்றை முடக்குவதற்கும், சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆபாசப் படங்களை வெளியிட்டதாகக் கூறப்படும் முகநூல் குழுக்களை நடத்தி வந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பெலியத்த பகுதியில், சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் மற்றும் விசாரணை செய்யும் பொலிஸ் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள், 011 2381058 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.








