சவூதி அரேபியாவில் தண்டனை அனுபவித்து வரும் சிவராசா அனோஜனின் வழக்கை கருணை அடிப்படையில் பரிசீலித்து, அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரேபிய மன்னர் சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் அல் சவூத்திடம் கோரிக்கை விடுக்கும் வகையில் மனுவொன்றை சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைச் சேகரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU), தேசிய ஷூரா சபை மற்றும் இலங்கை முஸ்லிம் ஊடக மன்றம் ஆகிய அமைப்புகளிடமும் இது தொடர்பில் கடிதம் மூலம் ஆதரவு கோரப்பட்டுள்ளது.
சிவராசா அனோஜனின் வழக்கில் ஆதரவு வழங்குவதுடன், இலங்கையில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் ஊடாக சவூதி மன்னரிடம் மரியாதையுடன் வேண்டுகோள் விடுத்து, அனோஜனின் வழக்கை கருணையுடன் பரிசீலிக்குமாறும் குறித்த அமைப்புகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிவராசா அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாக சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.







