வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் இந்த விடயத்தை எழுப்பிய அவர், இலங்கையில் தற்போது வேலைவாய்ப்பின்றி உள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான தகவல்களை கோரியுள்ளார்.
தேர்தல் காலத்தில் பட்டதாரிகளுக்கு அரசாங்கம் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியிருந்த போதிலும், இரண்டு ஆண்டுகள் கடந்தும் பலர் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளில் பட்டதாரிகளை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்காக தற்போது காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த வெற்றிடங்கள் 2026ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் நிரப்பப்படுமா என்பது தொடர்பிலும் அரசாங்கத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.
அத்துடன், அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது மற்றும் பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவது தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பட்டதாரிகளின் வேலையின்மைக்கான தீர்வு அரச துறையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன் மட்டுப்படுத்தப்படக்கூடாது எனக் குறிப்பிட்ட அவர், தனியார் துறையிலும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வேலைத்திட்டம் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த வரவு-செலவுத் திட்டம் எதிர்வரும் வாரங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், பட்டதாரிகளின் வேலையின்மையைத் தீர்ப்பதற்குத் தேவையான தரவுகளும் திட்டங்களும் அரசாங்கத்திடம் ஏற்கனவே தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.








