எரிபொருள் விலை உயர்வினால் மக்களுக்கு ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்கும், அஸ்வெசும பயனாளிகளுக்கு மேலதிக நிவாரணம் வழங்குவதற்கும் 47 பில்லியன் ரூபாய் பெறுமதியான மேலதிக ஒதுக்கீடு இன்று (04) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், குறித்த தொகையில் 41 பில்லியன் ரூபாய் வலுசக்தி அமைச்சின் செலவினங்களுக்காகவும், 6 பில்லியன் ரூபாய் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் அஸ்வெசும திட்டத்திற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தினால் உள்நாட்டுச் சந்தை நுகர்வோருக்கு ஏற்படும் பொருளாதார அழுத்தத்தைக் குறைப்பதற்காக, ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கும் 41 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அஸ்வெசும திட்டத்தின் கீழ், மிக வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு 6,250 ரூபாயும், வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு 4,000 ரூபாயும் மேலதிகக் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதாகப் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மிக வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கான கொடுப்பனவு இரண்டு தவணைகளில் செலுத்தப்படவுள்ளதுடன், இது ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் கொடுப்பனவாகும்.
இந்த மேலதிக மதிப்பீட்டிற்காக மேலதிகச் செலவுகள் எதுவும் ஏற்படாது எனவும், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளை ஏனைய துறைகளிலிருந்து மறுசீரமைப்பதன் மூலம் தேவையான நிதி பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.








