புற்றுநோய்க் கட்டியை அகற்றுவதற்காக நுரையீரல் அறுவை சிகிச்சை மேற்கொண்ட சில வாரங்களுக்குப் பின்னர், சிறைத் தொழிலில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ள மூத்த ஊடகவியலாளர் டொங் யூயுவை (Dong Yuyu) உடனடியாக விடுவிக்குமாறு ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ), சீன அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
64 வயதான டொங் யூயு, பாரிய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சில வாரங்களிலேயே சிறைத் தொழிலில் ஈடுபடுமாறு எதிர்பார்ப்பது மனிதாபிமானமற்ற செயலாகும் என CPJ ஆசிய-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பெஹ் லிஹ் யி தெரிவித்துள்ளார்.
உளவு பார்த்ததாகச் சுமத்தப்பட்ட போலியான குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உயிரைப் பொருட்படுத்தாத இத்தகைய நடவடிக்கைகளை சீன அதிகாரிகள் உடனடியாக நிறுத்தி, மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
CPJ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் டொங் யூயு, கடந்த ஆகஸ்ட் மாதம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சிறை மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் வாரத்திற்கு சுமார் 40 மணித்தியாலங்கள் ஆடைகளைத் தயாரிக்கும் சிறைத் தொழிலில் ஈடுபடுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் CPJ-யிடம் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த மே மாதம், இதயப் படபடப்பு மற்றும் உடல் எடை குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது நுரையீரலில் புற்றுநோய்க் கட்டி கண்டறியப்பட்டது.
இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் டொங் யூயு, பெய்ஜிங்கிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பெய்ஜிங் இலக்கம் 2 சிறையிலிருந்து, தியான்ஜின் நகரின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சாவோபாய் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனால், அவரைச் சந்திப்பதற்காக முன்னர் 40 நிமிடங்கள் பயணித்த அவரது குடும்பத்தினர், தற்போது இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாகப் பயணிக்க வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்குச் சொந்தமான குவாங்மிங் டெய்லி (Guangming Daily) பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் பத்தி எழுத்தாளருமான டொங் யூயு, 2022ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் ஜப்பானிய இராஜதந்திரி ஒருவருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, 2024 நவம்பர் மாதம் உளவு பார்த்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
டொங் யூயுவின் விடுதலைக்காக CPJ தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றது. மேலும், 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஊடக சுதந்திர விருதையும் அவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
CPJ-யின் 2025ஆம் ஆண்டு சிறைக் கணக்கெடுப்பின்படி, ஊடகவியலாளர்களைச் சிறையில் அடைப்பதில் உலகிலேயே மோசமான நாடாக சீனா பதிவாகியுள்ளது. தற்போது அந்நாட்டில் 49 ஊடகவியலாளர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக CPJ மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கருத்துக் கோரிக்கைக்கு சீன வெளிவிவகார அமைச்சு உடனடியாகப் பதிலளிக்கவில்லை. (CPJ)







