அம்பாறை – கல்முனைக்குடி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களை வைத்திருந்த 61 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையும் கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகமும் இணைந்து நேற்று (03) இந்த விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.தென்கிழக்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் நிறுவனத்திற்குக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, கல்முனைக்குடி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.இதன்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக 94 சிறிய பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த 6 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் கல்முனைக்குடி பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.








